21 அக்டோபர் 2020

பிரித்தானிய அரசின் புலிகள் மீதான தடை தவறானது!

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர். இரகசிய விசாரணையின்போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர். எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது. இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தீர்ப்பையும், அது குறித்த சிபார்சையும் ஆணையம் பிரித்தானிய அரசுக்கு அனுப்பிவைக்கும். அதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது.

14 அக்டோபர் 2020

பிரபாகரன் போல இருக்கும் நீங்கள் முரளீதரன் படத்திலா?கவிஞர் தாமரை காட்டம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போற்ற தோற்றப் பொருத்த உள்ளவர் என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்கள் நடியுங்கள் என்றும் கவிஞர் தாமரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ! சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்....காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !? ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?!வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா? நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்!என்னது...நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா? அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'? நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ?? நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி, மூன்றுவேளை சோறு ???? தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம்! தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கவிஞர் தாமரை கூறியுள்ளார்.