16 நவம்பர் 2011

தமிழர் பகுதிகளில் சிங்களப்படைகள் இருக்கும்வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை!

கடந்த திங்கட்கிழமை (15 நொவெம்பர், 2011) பரந்தன் பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்தும் முல்லைத்தீவு தனியார் பேருந்தும் சிறிய விபத்தில் சிக்கியிருந்தது. இது தொடர்பில் இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் தமக்குள் இணக்கம் கண்டு சமாளித்துச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த படையினர் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டினர், உரிமையாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த பேருந்தை சிங்கள இராணுவம் அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டது. ஆனால் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்களுடன் காவல்துறையினர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கள இராணுவத்தினர் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை என்று கூறமுடியாது. கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கினார்கள்.
மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த 5 ததேகூ நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடிகளைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு நாவாந்துறையில் நடமாடிய கிறிஸ் மனிதனை மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அவன் நாவந்துறையிலுள்ள இராணுவ காவலரணுக்குள் ஓடி ஒளிந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரது வண்டிகளைப் பொதுமக்கள் அடித்து நொருக்கியதாகக் கூறி அங்கு உறங்கிக் கொண்டிருந்த மக்களை கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து � பூட்டியிருந்த வீடுகளை உடைத்து வீட்டில் இருந்த அனைவரையும் தற தறவென்று இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கினர். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் என எவரும் தப்பவில்லை. நித்திரையிலிருந்த பொது மக்களை மதுவெறியும் இனவெறியும் தலைக்கேறிய காவல்துறையிரும் இராணுவமும் பொல்லுகளால் அடித்தும் காலணிகளால் உதைத்தும் ஊழித்தாண்டவம் ஆடினர்.
தமது பிள்ளைகளை -கணவனை கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச் செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர். யார் எவரென்றில்லாமல் வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூடக் கொடுக்காமல் மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் சிங்களப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர். ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது.
கைது செய்யப்பட்டு காவல்துறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட மக்கள் தம்மிடம் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி இராணுவம் மற்றும் காவல்துறை கை, கால் மற்றும் உடல் முழுவதும் தாக்கப்பட்ட நாவாந்துறை மக்கள் இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்று குற்றஞ்சுமத்தி 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம் சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பாக 61 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் நாளுக்குத் தள்ளிப் போட்டுள்ளது.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக ஒவ்வொரு வழக்கு முறைப்பாட்டாளரும் தலைக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வாதிகளாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபா இராசபக்சே, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசுரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க, காவல்துறை மா அதிபர் என். இலங்கக்கோன், இராணுவத்தின் 51 ஆவது படையணித் தளபதி வெல்கம, 512 ஆவது பயைணியின் தளபதி அஜித் பள்ளவெல, துணை காவல்துறை அதிபர் நீல் தலுவத்த, மூத்த காவல்துறை அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவிப் காவல் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ. பண்டார, யாழ்ப்பாண காவல்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் காவலர் நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கம் போல் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக நாவாந்துறையில் வெடித்த குழப்ப நிலையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதற்காக யாழ்ப்பாண காவல்நிலையத் தலைமைக் காவல் அதிகாரி சமன் சிகேரா காவல்துறை அதிபர் காமினி சில்வா அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறையில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குல்களை நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்கு சிங்களப் படைகள் மேற்கொண்ட நர வேட்டை எனக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் சிங்கள அடக்குமுறை இராணுவம் நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம் எங்கென்றாலும் தமிழர்கள் அடங்கித் தான் ஆகவேண்டும். மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.
அளவெட்டி, நாவாந்துறை, பரந்தன் என இராணுவ பயங்கரவாதம் தொடரும் போது இராசபக்சே அரசு அவற்றைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிங்கள இராணுவமும் சிங்கள காவல்படையும் ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது?
1) நாங்கள் ஆளும் இனம் நீங்கள் ஆளப்படும் இனம் எனவே நீங்கள் வாய்பொத்தி கை கட்டி வாழப் பழக வேண்டும்.
2) நாங்கள் எசமானர்கள் நீங்கள் கொத்தடிமைகள். எனவே நாங்கள் வைத்ததுதான் சட்டம்.
3) நாங்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் வென்று விட்டோம். எனவே நாங்கள்தான் வரலாற்றை எழுதுவோம். எழுதுகிறோம்.
4) நாங்கள் முதல்தர குடிமக்கள் நீங்கள் மூன்றாந்தரக் குடிமக்கள் என்பதை கனவிலும் மறந்துவிடக் கூடாது.
5) நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களைப் பயங்கரவாதிகளாகவே பார்ப்போம்.
6) நாங்கள் எது செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க முடியாது. நாங்கள் சட்ட திட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள் என்பது நினைவிருக்கட்டும்.
7) மனிதவுரிமை ஆணையத்திடம் முறைப்பாடு செய்கிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள்.
8) உயர் அல்லது உச்ச நீதி மன்றத்துக்கு நீதி கேட்டுப் போகிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடையாது.
தொடர்ந்து வடக்கில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். சிங்கள இராணுவமும் காவல்துறையும் அவர்களை தங்கள் எதிரிகளாகவே பார்க்கின்றன.
ஆனால் சிறீலங்காவில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு எதுவிதமான சிக்கல்களே இல்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவை - இணக்கத்தைப் பேணி வருகிறது. வடக்கில் வசந்தம் வீசுகிறது கிழக்கில் உதயம் உதித்துள்ளது என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் நடந்த ஜெனிவா மாநாட்டில் பேசியிருந்தது நினைவிருக்காலம்.
மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தால் எப்படி? வடக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை (Sinhala occuption army) அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கில் குடிகொண்டிருக்கு மட்டும் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பில்லை. நிம்மதி இல்லை. சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாடே தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக