19 நவம்பர் 2011

தமிழர் எழுச்சி வாரத்திற்கு நாம் தமிழர் கட்சி அழைப்பு.

பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை தமிழர் எழுச்சி வாரமாக தமிழின சொந்தங்களும், நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்க தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தமிழரின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வீர விளையாட்டுக்களான சிலம்பம், கபடிப் போட்டிகள், ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், மகளிர் பங்கேற்கும் கோலம் போடுதல், கும்மியாட்டம், நடனப் போட்டிகள், இளம் சிறார்களுக்கு திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
ஓவியம், கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறந்த விளஙகுவோருக்கு ‘வெற்றித் தமிழர்’ விருதும், ‘வீரத் தமிழர் விளையாட்டு, அதில் வென்று மானத்தை நிலைநாட்டு’ என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் சிலம்பம், கபடி போன்ற வீர விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவோருக்கு ‘வீரத் தமிழர்’ விருதும், கோலம், கும்மியாட்டம் திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்து விளங்கும் இளையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
கலையை மீட்பதும், கலைஞர்களைக் காப்பதும் நமது கடமை’ என்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மாலைப் பொழுதில் கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றை நாம் தமிழர் கட்சியின் கலை பண்பாட்டுப் பாசறை ஒழுங்கு செய்யும். இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியன இடம் பெற வேண்டும். இதன் பிறகு மாலை 7 மணி முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில் உரையாற்றுவோர் இனத்தின் விடுதலைக்காக தம் இன்னியிரை ஈந்த மாவீரர்கள் போன்றுவோம் என்ற இலக்குடன் இக்கூட்டங்கள் நடைபெறும்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20ஆம் தேதி நாகை மாவட்டம் கீழ்வேளூர், 21ஆம் தேதி திருப்பெரும்புதூர், 22ஆம் தேதி இராமநாதபுரம், 23ஆம் தேதி சிவகங்கையிலும், 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும், 25ஆம் தேதி கோவையிலும், தேசியத் தலைவர் பிறந்த நாளான 26ஆம் தேதி நாமக்கல் நகரிலும், மாவீரர் தினமான 27ஆம் தேதி கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்திலும் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடைபெறும். 28ஆம் தேதியன்று தமிழர் எழுச்சி வார நிகழ்வு நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.
26ஆம் தேதி நாமக்கல்லிலும், 27ஆம் தேதி மஞ்சக் குப்பத்திலும் நடைபெறும் பேரணியில், தங்கள் மாவட்டத்தில் தமிழர் எழுச்சி வார விழாவை முடித்துவிட்ட நாம் தமிழர் தோழர்களும், தமிழ்ச் சொந்தங்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இன்று19ஆம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் உரையாற்றுகிறார். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மிக முக்கியத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக