19 நவம்பர் 2011

சாதாரண சிப்பாய்களை போர்க் குற்றவாளிகளாக காட்டி மகிந்த சகோதரர்களை காப்பாற்ற முனையும் ஆணைக்குழு!

வன்னியில் நடந்து முடிந்த இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 100 படையினர் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
“லங்கா நியூஸ் வெப்” என்கிற இணையத்தளம் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
“2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரின்போது அனைத்துலகச் சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்பதற்காக, மேஜர் தரம் வரையிலான சில அதிகாரிகள் உட்பட சுமார் 100 படையினர் பலிக்கடாக்கள் ஆக்கப்பட உள்ளனர்” என்று அந்த இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு அறிக்கையில் உள்ளவை என்று “லங்கா நியூஸ் வெப்” கூறியவை வருமாறு:
போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துக்கும் இந்த 100 படையினருமே பொறுப்பு என்று கூறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, இவர்கள் மீதான குற்றங்களை இலங்கைச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இலவச வீடுகள் மற்றும் ஒரே தடவையிலான நிதிக் கொடுப்பனவு என்ற ரீதியிலான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. அதேவேளையில், காணாமற்போனவர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
பயங்கரவாதிகளிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் படையினர் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகின்றது.
இராணுவத்தின் இரகசியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை அல்லது பலரை பொது நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடர்பான விவகாரங்களில் அரசு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டது என்று விமர்சித்துள்ள அறிக்கை, இதிலிருந்து கிடைத்த படிப்பினைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்குத் தொடர்புகள் இருந்தன என்பது தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். வெள்ளைக்கொடி விவகாரம் எனப் பரவலாக அறியப்பட்ட பிரச்சினையில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளபோதும் ஆணைக்குழு அறிக்கையில் அது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.
வன்னியில் நடத்தப்பட்ட மருத்துவமனைகள் மீதான தாக்குதல், பொதுமக்கள் நிலைகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் நிலை மீதான எறிகணை வீச்சு, தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள், போதியளவு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்படாமை என்பன குறித்தும் ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவுமேயில்லை. இவ்வாறு அந்த இணையத் தளம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக