04 நவம்பர் 2011

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பொலிசார் உறுதியாம்!

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை ஒரு மாதகாலத்துக்குள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் தெரிவித்ததாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் யாழ். மாவட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் தொடர்பாக அரச அதிபர் தெரிவித்தவை வருமாறு:
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் கூடிய நேரம் கலந்துரையாடப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் எனக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளைப் பொலிஸாரிடம் வழங்கியுள்ளேன். இது தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகப் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ். குடாநாட்டு மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்குரிய சகல வழிவகைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடனே பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்யச் செல்லும் பெண்களைப் பொலிஸார் தொலைபேசி இலக்கங்கள் கேட்பது தொடர்பிலும் தெரிவித்தேன். இந்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக அரச அதிபர் குறிப்பிட்டார்.
இதேவேளை நீதிமன்றங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கு அரச அதிபர் என்ற ரீதியில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக