11 நவம்பர் 2011

மாலைதீவில் டக்ளசை சந்தித்தார் மன்மோகன் சிங்!

தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார்.
நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய நீதிமன்றம் ஒன்றில், கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புதுடெல்லியில் சந்தித்தது குறித்து ஏற்கனவே சர்ச்சைகள் உருவாகியிருந்தன.
இந்தநிலையில் நேற்று டக்ளஸ் தேவானந்தா மீண்டும் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா சிறிலங்காவின் அமைச்சராக இருப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு இல்லை என்பதாலும், டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
ஆனால் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய அதிகாரிகள் மும்பையில் கைது செய்து சிறிலங்கா அரசிடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக