கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஆறு தமிழ்நாட்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் 10 மீன்பிடிப்படகுகள் சேதமடைந்துள்ளதாக பிரிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
கச்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்டிபிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீதே, அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படகு ஒன்றின் யன்னல் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துண்டுகள் வெட்டியதால் மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். கல்வீச்சினால் மேலும் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வந்த சிறிலங்கா கடற்படை, தற்போது கற்களை வீசித் தாக்கத் தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக