29 நவம்பர் 2011

தளபதி கேணல் நகுலனை மின்னேரியா வதை முகாமில் வைத்து சிங்களப்படைகள் படுகொலை செய்துள்ளனர்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.
இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.
கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக