06 நவம்பர் 2011

இனவாதி குணதாசவின் கூற்றுக்கு சிறிதரன் பதிலடி!

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவர்களது வாழ்வுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மரண தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றது. இயலும் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றைக் கண்டு ஒரு போதும் அஞ்சாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை அரசையும் மீறி தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. உதவிச் செயலரைச் சந்தித்தமைக்காகவும் வெளிநாடுகளில் இலங்கையில் பிரிவினை வாதத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பேசியமைக்காகவும் வெளிநாடு சென்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்குவதுடன் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்த கருத்துத் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து தான் அவர்கள் தங்களது அராஜகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கைது செய்யட்டும். அதற்காக ஒருபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயப்படப்போவதில்லை.
தமிழ் மக்கள் இலங்கையில் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற செய்தியை வெளியுலகுக்கு சொன்னவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். தமிழ் மக்கள் எப்போது தங்களது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றார்களோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடிய வரலாறுகள் தான் இருக்கின்றன.
தந்தை செல்வாவின் காலத்தில் அமிர்தலிங்கத்தை கைது செய்தார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் நடந்த வேளையில் அதனைக் குழப்பியவர் ஜே.ஆர். அதன் பின்பு இலங்கை இந்தி ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்தவர்கள் இனவாதிகளான ஜே.வி.பியினர் தான்.
தமிழ் மக்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்கக் கூடாதென்பதுடன், அவர்கள் இலங்கையில் ஒரு தேசிய இனம் இல்லை என்று வெளிக்காட்டுவதில் சிங்கள இனவாதிகளும், சிங்களக் கட்சிகளும், பௌத்த பிக்குகளும் முதன்மை வகித்திருக்கின்றார்கள். இதனை விட விகாரமாதேவி தமிழனின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று விரும்பிய வரலாறுகளும் உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மை நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக போராடியவர்கள் நாங்கள். ஆயுதமேந்திப் போராடிய காலம் முடிவடைந்து ஜனநாயக ரீதியாக உலகுக்கு உண்மையைச் சொல்லி எமது உரிமையைக் கேட்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. இதனை முழு உலகமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால் எமக்குத் தெரிந்த வரையில் ஒர இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இங்கு ஒரு தேசிய இனத்தை அழித்தது என்பதையும் இங்கு இந்த மண்ணில் இன அழிப்பு நடந்தது என்பதை நிரூபித்து இங்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்ற நிலைப்பாடு உணர்த்தப்பட வேண்டும்.
இதன் மூலமாக தமிழ்மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்காக அவர்கள் எம்மை கைது செய்து சிறையில் அடைந்தாலும் மரண தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக