
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது.
கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விபரிக்கும் இந்த ஆவணப்படம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருந்தது.
இந்த ஆவணப்படம் நியுயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகங்களிலும், இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டனை வழங்கப்படாத போர்க்குற்றங்கள்‘ (தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை) என்ற பெயரில் இரண்டாவது ஆவணப்படத்தை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சனல்-4 தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கென இயக்குனர் கல்லும் மக்ரே ஒளிப்படங்கள், காணொலிப் பதிவுகள்,நேரில் கண்ட சாட்சிகள், ஆவணங்கள் போன்ற புதிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாக இதன் தயாரிப்பாளர் ஜொன் சினோ தெரிவித்துள்ளார்.
“போர்க்குற்றங்களுக்கு அதிகாரபூர்வமாக உடந்தையாக இருந்தவர்கள் பற்றிய மேலதிக சாட்சியங்களை இது வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் எதைக் கண்டறிந்தோம் என்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவோம். முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இந்தப் படக்காட்சிகளும் அதிர்ச்சிகளைக் கொடுப்பதாகவும் விழிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்புவிவகார தலைவர் டொரத்தி பைன்,
“சிறிலங்காவின் கொலைக்களங்கள் மூலம் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டது உலகெங்கம் கவலையை தோற்றுவித்ததுடன் மேலதிக விசாரணைகளுக்கும் அழைப்புகள் விடப்பட்டன.
இதன் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிந்து தொடர்ந்து வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக