20 நவம்பர் 2011

சனல்போர் காணொளி போலியானதென ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழு பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முதற்தோற்றச் சான்றுகள் இருப்பதாலேயே இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணை செய்யப்பட வேண்டிய சம்பவங்கள் குறித்தோ, இதற்குப் பொறுப்பானவர்கள் என்றோ எவரது பெயரையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலைகளை மேற்கொண்டதாக கூறும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி முற்றிலும் போலியானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் 400 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அறிக்கை கையளிப்பு காலையில் நடக்குமா மாலையில் நடக்குமா என்பது குறித்து இருவேறு குழப்பமான தகவல்களை அவர் ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் காலை 11 மணிக்கு இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், மற்றொரு ஆங்கில வாரஇதழிடம் மாலை 6.30 மணியளவில் அறிக்கை கையளிப்பு இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு நேரம் பற்றிய குழப்பங்கள் இருந்தாலும், இன்று இந்த அறிக்கை அலரி மாளிகையில் வைத்து சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
2002இல் போர்நிறுத்தம் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது தொடக்கம் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக