21 நவம்பர் 2011

ஸ்ரீலங்கா பாராளுமன்றில் தண்ணீர் போத்தல் வீச்சு!

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது எதிர்க்கட்சியினர் தண்ணீர் போத்தல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட உரை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழுப்பங்களுடன் இடம்பெற்று வருகிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்றம் வந்து வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்.
இதன்போது இடையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவுசெலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல்போட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.
வெட்கம் வெட்கம் என்று எழுத்தப்பட்ட பதாகைகளுடன் கூச்சலிட்ட ஐதேகவினருக்கு எதிரான ஆளும்கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
ஐதேகவினரிடம் இருந்து பதாகைகளை ஆளும்கட்சி உறுப்பினர்கள் பறிக்க முற்பட்ட போது, ஒருகட்டத்தில் ஐதேக உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் திலும் அமுனுகமவும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டனர்.
இதன்போது ஐதேக உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐதேக பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் பின்வரிசையில் இருந்து எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன.
அதேவேளை எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர்போத்தல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சில அங்குலம் தொலைவில் விழுந்தது.
இதன் பின்னர் ஐதேக உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக