போர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுகள் வந்த பின்னர் 35 மில்லியன் டொலரை கனடா உதவியாக வழங்கியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கனேடியப் பிரதமர், அடுத்த கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றால் அதைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டாவா தூதரகத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
“சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கனடா எம்மைக் கைவிட்டு விடக் கூடாது.
எமக்கு எல்லா நாடுகளினது ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாக கனடாவின் உதவி அவசியமானது.
அவர்கள் பொருள் உதவி செய்துள்ளார்கள். வழமைக்குத் திரும்புவதற்கு அவர்கள் எமக்கு உளரீதியான பலத்தைக் கொடுக்க வேண்டும்.
கனடா உதவிகளை வெட்டினாலோ, அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்தாலோ அதை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்.
சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெலத் கூட்டத்தில் கனடாவின் பங்கு இல்லையென்றால் மோசமாக இருக்கும்.
ஐ.நா நிபுணர்குழுவின அறிக்கை பாரபட்சமானது. ஒருபக்க சாட்சியங்களைக் கொண்டது.
அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் நிபுணர்குழுவுக்கு முன்பாக எமது ஆலோசனைகளை கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடுமானால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான கதவுகளைத் திறந்து விடத் தயாராகவே உள்ளது.
ஆனால் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவது சிறிலங்காவின் இறைமையை மீறுகின்ற செயலாகும்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும், கனடாவில் வாழும் சுமார் 300,000 பேரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே கனேடிய அரசாங்கமும், கனேடியப் பிரதமர் ஹார்பரும் அடிபணிந்து விட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் குற்றச்சாட்டை கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிராகரித்துள்ளார்.
மனிதஉரிமைகளின் சார்பிலேயே கனடா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“கனேடியப் பிரதமரின் உறுதியான நிலைப்பாடு குறித்து கனடாவிலுள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக