05 நவம்பர் 2011

கருணா,பிள்ளையான் இருவரையும் ஏன் மகிந்த அவுஸ்ரேலியா அழைத்து செல்லவில்லை?

108பேருடன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணாவையோ பிள்ளையானையோ கூட்டிப்போகவில்லை. இது பற்றி கருணாவோ அல்லது பிள்ளையானோ வாய்திறக்க முடியுமா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டிச்செல்லவில்லை என கருணாவும் பிள்ளையானும் தெரிவித்திருப்பது பற்றி அரியநேத்திரனிடம் கேட்ட போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
தமிழ் மக்களைப்பற்றி பேசுவதற்கோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி பேசுவதற்கோ கருணாவுக்கோ பிள்ளையானுக்கோ உரிமை இல்லை. இவர்கள் செல்லாக்காசுகள். இவர்கள் ஒட்டியிருக்கும் அரசாங்கம் கூட இவர்களை கணக்கெடுப்பதில்லை.
இவர்களின் பிரசாரங்கள் எதுவும் எடுபடாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். இதனால்தான் இவர்களை எங்கும் கூட்டிச்செல்வதில்லை என அரியநேத்திரன் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சென்றது பிரதேசங்கள் பற்றி பேசுவதற்கல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கே அங்கு சென்றுள்ளனர். அந்த குழுவுக்கு தலைமை தாங்கியிருப்பவரே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்தான். இந்த நிலையில் இதை புரியாதவர்கள் போல் இவர்கள் பிதற்றுகிறார்கள் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களைப் புறந்தள்ளிச் சென்றுள்ளது என்றால் அதனைப் பற்றி பேச வேண்டியவர்களும் கவலைப்படுபவர்களும் நாமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கருணாவோ அல்லது பிள்ளையானோ அல்ல.
அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியோ தமிழ் மக்கள் பற்றியோ பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்து கொண்டிருக்கும் இவர்கள் இப்போது பிரதேச, மாகாண வாதத்தின் ஊடாகப் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றனர்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச வாதத்துடன் செயற்படும் ஒரு கட்சியல்ல என்பதனை நான் இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என அரியநேத்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக