22 நவம்பர் 2011

மகிந்த ஆணைக்குழுவின்(நல்லிணக்க ஆணைக்குழு)பரிந்துரை வெளியானது எப்படி?

சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை (மகிந்த ஆணைக்குழு என்றே சொல்லவேண்டும்)இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.
“பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிறிலங்காவை எந்தவொரு அரசாங்கமும் கேட்க முடியாது.
அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை தடைசெய்கின்றது.
ஆனால் ஒரு அரசாங்கம் பணயக்கைதிகளை மீட்கின்ற போர் நடவடிக்கையின் போது அதைக் கடைபிடிக்க முடியாது“ என்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.
“போர் நடவடிக்கையை நிறுத்துவது அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவது பிரச்சினைகளை மோசமாக்கவே செய்யும்“ என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி பல்வேறு சந்தர்ப்பங்களில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய பிரதான குற்றச்சாட்டுக்கே ஆணைக்குழு இவ்வாறு பதிலளித்துள்ளது.
388 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் வரைபடத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
காணாமற்போனோர் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பலர், குறிப்பாக வடக்கு,கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“படையினரால் கைதுசெய்யப்பட்டு காணமற்போனவர்கள் தொடர்பாக, அவர்களின் அன்புக்குரியவர்களின் சாட்சியங்களை புறக்கணிக்கக் கூடாது. காணாமற்போன நடவடிக்கைளில் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை“ என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆகக்கூடிய பாதுகாப்புடன் கடும்போக்குள்ள தீவிரவாத சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா தடுப்புமுகாமுக்கு சென்றிருந்த தமது உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பாதுகாப்புப் படையினரோ காவல்துறையினரோ இல்லாத சூழ்நிலையில் சந்திக்க முடிந்ததாகவும் ஆணைக்கழு கூறியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளோர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விரைவான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எல்லா சமூகத்தினருக்கும் சமமான உரிமைகளும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு நிலத்தையும் யாரும் வாங்கக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் உள்ள நிலங்களை வேறு பகுதியைச் சேர்ந்த யாராவது வாங்க முடியாது என்ற சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும்.“
“ஆயுதக்களைவுக்கு நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அண்மையில் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொல்லப்பட்ட சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.
ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான எல்லா ஆயுதங்களையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல மாதங்களுக்கு முன்னர் கையளித்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என்று, மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவை மும்மொழி நாடாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இந்த அறிக்கையில், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நோர்வேயின் நடுநிலையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட, பிரச்சினைகளுக்கு காரணமான போருக்கு முந்திய மற்றும் பிந்திய பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“அரசு மற்றும் அரசு சாராத தரப்புகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த போர்நிறுத்த உடன்பாட்டை ஒரு முன்மாதிரியாக கொள்ள முடியாது“ என்றும் கூறியுள்ள அறிக்கையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவசர அவசரமாக இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டதற்காக சிறிலங்கா அரசாங்கத்தையும் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.
“டக்ளஸ் தேவானந்தா ஆணைக்குழு முன்சாட்சியமளித்த போது, போருக்கு முந்திய மற்றும் பிந்திய சூழலில் அவரது குழுவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு முழுப்பலான பதில்களையே அளித்துள்ளார்“ என்றும் கூறியுள்ளது.
“விடுதலைப் புலிகளின் பின்புலத்துடன் சனல்-4 வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொளி முற்றிலும் போலியானது.“
உலகின் பல்வேறு இடங்களிலும் காண்பிக்கப்பட்ட இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை அறிய தாம் நாசா நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவசரஅவசரமாக சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மீது ஆணைக்குழு குறை கூறியுள்ளது.
“தேசிய பிரச்சினைகள் விடயத்தில் 24 மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் கருத்தை எதிர்பார்ப்பது சரியல்ல“ என்றும், பொதுமக்கள் சட்டரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இதன் மூலம் பறிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையும் தேவைப்படாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக