20 நவம்பர் 2011

வெளிநாட்டு இராஜதந்திரிகள் கொழும்பில் இரகசிய ஆலோசனை!

சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள், தாம் முக்கியமாக அறிக்கையின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருப்பதாகவும், மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவது அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தும் தெரிவிப்பது குறித்தும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவது குறித்தும் அறிக்கையில் பரிந்துரைக்கப்படுவது அவசியமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இல்லையேல், உலகத்தை ஏமாற்ற செய்யப்பட்ட முயற்சி என்றே அனைத்துலக சமூகம் கருதும் என்றும் அமெரிக்க, பிரித்தானிய இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் ஒத்த கருத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு பகிரங்கப்படுத்தப்படும் ஆவணமாக இல்லாத போதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் வெளிப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை அறிந்து கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதுடன் இது இரகசியமாக வைக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக