வெள்ளைக்கொடி வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி வணிகசுந்தரவின் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவினால் ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான வேரவெவ, சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தார்.
ஆனால் ஏனைய இரு நீதிபதிகளான தீபாலி வணிகசுந்தரவும் ரசீனும் அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றில் குற்றவாளி என்று அறிவித்தனர்.
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபாய ராஜபக்ச மீது பழி சுமத்தும் வகையில், போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு அவர் உத்தரவிட்டிருந்தாக “சண்டே லீடர்“ ஆசிரியர் பிரெட்றிகா ஜான்சுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீபாலி வணிகசுந்தர தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அரசியலில் தாம் ஈடுபடுவதை தடுக்கவே தனக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் கூறியுள்ளார்.
“எதிர்க்காலத்தில் நான் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளுக்காகக் கிடைத்த ஆசீர்வாதமாகவே இந்த தீர்ப்பைக் கருதுகின்றேன்.
நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை நானோ, மக்களோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்த தீர்ப்பு நியாயமற்றது. இதனால் மக்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்துள்ளது.
இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை வெளிப்படையாகியுள்ளது. இதனால் நீதிமன்றுக்கு எதிர்காலத்தில் கரும்புள்ளி விழப் போகிறது.
நான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்ட ஒரு அரசியல்வாதியின் சதி காரணமாகவே எனக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னர் சிறைக்காவலர்களால் சரத் பொன்சேகா வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே குழப்பநிலை உருவானது.
இதன்போது சிறைக்காவலர்களால் சட்டவாளர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் இரண்டு வாகனங்கள் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டன.
பெருமளவு முன்னாள் படையினரும், போரில் உடல்உறுப்புகளை இழந்த படையினரும் நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக