04 நவம்பர் 2011

கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்திற்கு இனச்சாயம் பூசுவது தீர்வு கிடைப்பதை தடுக்கவே!

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடுப்பதற்காகவே பேரினவாதிகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாதச் சாயம் பூசுகின்றனர் என்று புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாட்டுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படாதபோது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகுமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது:
வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பினர் எந்தவொரு இடத்திலும் தனித் தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றமை இது முதற்தடவையல்ல. கடந்த காலங்களிலும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத போது பல தமிழ் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
அது மட்டுமல்ல இன்றைய ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை மீறுவதாக ஐ.நா. சென்று முறைப்பாடுகளை செய்துள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல பல்வேறு காலகட்டங்களில் சிங்களத் தலைவர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காததன் காரணமாகவே தலைவர்கள், வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். தீர்வுகள் கிடைக்குமானால் வெளிநாடு சென்று முறையிடும் தேவை ஏற்படாது. ஆனால் பேரினவாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடுக்கின்றனர். இதனை இவர்கள் கைவிட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக