25 நவம்பர் 2011

சரத் பொன்சேகாவை விடுவிக்காவிட்டால் நடவடிக்கை என அமெரிக்கா எச்சரிக்கையாம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா நடத்திய ஆய்வு ஒன்றில், சிறிலங்காவைச் சேர்ந்த பெரும்பாலானோர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரியவந்துள்ளது என்றும் அந்த இராஜதந்திரி கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அரசு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் இந்த விவகாரத்தை அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்பும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக சிறிலங்கா அமைச்சரை கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசே சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடைசிநேரத்தில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு வெறொரு பிரதிநிதியை சந்திக்க வைத்துள்ளார். அவரே சிறிலங்கா அமைச்சருக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக