உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாகி விட முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐ.நா பொதுச்செயலர் சந்திக்கவுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“ஐ.நா முறையை சிறிலங்கா எதிர்க்கவில்லை. யாரை வேண்டுமானாலும் அவர்கள் சந்திக்கலாம்.
சிறிலங்காவில் பல அரசியல்கட்சிகள் உள்ளன. அவற்றில் சில நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஆகவே சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்றும், தமிழ் மக்களின் கருத்தை அவர்கள் பிரதிபலிப்பதாகவும் கருதுவது அடிப்படையில் தவறான நம்பிக்கையாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கப் பயணம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கவில்லை.
தேசிய பிரச்சினை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டுக்குள்ளே உள்ளது. இங்கிருந்தே அதற்கு தீர்வு எட்டப்பட முடியும்.
வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
நாடாளுமன்றத்தின் மூலமோ, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமோ தான் இதற்கு தீர்வு எட்ட முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கவுள்ளது. அவர் அதனைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அது பொதுமக்களுக்கு எப்போது பகிரங்கப்படுத்தப்படும் என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.“ என்று அவர் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், தொரயா ஒபெய்ட் அம்மையாரை நியமித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட ஜி.எல்.பீரிஸ், “அவர்கள் தம்மை விசாரிக்க விரும்பினால் அதைச் செய்யட்டும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர் மனிதஉரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் கூறியுள்ள கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“வேறு நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக எமது கொள்கைகளைத் தயாரிக்க முடியாது.
சிறிலங்கா ஒன்றும் எவருடையதும் காலனித்துவ நாடல்ல. இது சுதந்திரமான இறைமையுள்ள நாடு.
எமக்கு எந்த நாடும் உத்தரவிட முடியாது. காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம்“ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக