26 நவம்பர் 2011

கட்டுப்பாடுகளையும் மீறி யாழில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக யாழில் பாதுகாப்பு நிலவரம் உசார் படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்க விடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிறிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சாதாரண தினமாகவே காணப்படப்போகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இடம்பெறப்போவதில்லை என்று என்னால் உறுதி கூற முடியும் என்றும் யாழ். கட்டளைத்தளபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாண நகரின் பல வீதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர் என்று மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தேநீர்ச்சாலைகளில் மக்கள் ஒன்று கூடி கேக்கைக் கொள்வனவு செய்து உண்டு மகிழ்ந்துள்ளனர்.
ஆலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி விட்டு மக்கள் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தேநீர்ச்சாலைகளில் முன்னெடுத்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆக்கிரமிப்புக்களும், அடக்குமுறைகளும் எக் காரணம் கொண்டு வெற்றியளிக்காது என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக