12 நவம்பர் 2011

மகிந்த அழைத்தாராம் மன்மோகன் மறுத்தாராம்!நம்ப முடிந்தால் நம்புங்கள்!

இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அடியோடு நிராகரித்து விட்டார் எனத் தெரியவருகிறது.
“தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது” என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துவிட்டார் மன்மோகன்சிங்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
மாலைதீவில் பிரதமர் மன்மோகன் சிங், அடு அடோல் என்ற கூட்டு தீவுப் பகுதியில் உள்ள ஷாங்கிரிலா ரிசார்ட் என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். சார்க் நாடுகளின் ஏனைய தலைவர்களும் இதே இடத்தில் தங்கியுள்ளனர்.
இங்கு நேற்றுமுன்தினம் காலை 9.30 மணிக்கு முதலில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சில் இந்தியாவுக்கு “அதிக சுலுகை அளிக்கப்படும் நாடு” என்ற வர்த்தக அந்தஸ்தை வழங்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்காது என மன்மோகன் சிங்கிடம் கிலானி உறுதியளித்தார்.
இதன் மூலம், பாகிஸ்தானில், இந்தியப் பொருள்களுக்கு, மற்ற நாட்டுப் பொருள்களை விட குறைவான இறக்குமதி வரியே விதிக்கப்படும். இந்த அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இரு நாட்டினரும் எளிதாகச் சென்று வரும் வகையில் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. பேச்சுக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த நடைபெற்று வரும் பேச்சில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம், இரு தரப்பினருக்கும் திருப்தியாக உள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, எதிர்த்து குற்றம் சாட்டுவது போன்றவை மறக்கப்பட வேண்டும் என மன்மோகன் சிங் கூறினார்.
இந்தச் சந்திப்பு முடிந்ததும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியவை வருமாறு;
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
இதன்போது இலங்கைக்கு வருமாறு மன்மோகன் சிங்கை மஹிந்த ராஜபக்ஷ அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியமர்வு விவகாரம், அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும்வரை இலங்கைக்கு வர இயலாது என மன்மோகன் கூறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக