14 நவம்பர் 2011

அமெரிக்காவும் நோர்வேயும் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பு கோருகின்றனர்!

யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் நோர்வேயும் அமெரிக்காவும் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும். இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு முதன் முறையாக விண்ணப்பித்தும், அனுதாபரீதியிலாவது அதிகப்படியான வாக்குகள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. 47 அதிகப்படியான வாக்குகளை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு நாட்டிற்குள் இல்லாததால் 27 வாக்குகளே இலங்கைக்கு கிடைத்துள்ளன எனவும் அரசாங்கத்தின் பாவத்திற்கு நாடும் மக்களும் தலைகுனிந்துள்ளனர் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக