சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தில் மட்டும் வைத்திருந்தால் போதாது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்தாது போனால், அர்த்தமில்லை. சித்திரவதைகளுக்கு எதிரான சட்டத்தை சிறிலங்கா கொண்டுள்ள போதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பாக கடந்த 14 ஆண்டுகளில் 3 வழக்குகளையே சிறப்பு காவல்துறை அலகு முன்னெடுத்துள்ளது.
2008ம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவல் ஒன்றில், அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 90 பேருக்கு எதிராக 42 குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியிருந்தது.
மேலதிகமாக 31 சித்திரவதை வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் யாருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
சிறிலங்கா காவல்துறையினராலும் சிறைக்காவலர்களாலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவம், கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் துணை ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக சித்திரவதைகள் செய்யப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர்.
பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ள போதும், அவை குறித்த விசாரணைகளும் மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
கட்டாயமாக காணாமற்போகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களில் சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளின் சாட்சிகளாக உள்ளனர்.
சிறிலங்காவில் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, காலவரையறையின்றி, பலரும் வருடக்கணக்கில் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறை, சிறைக்காவலர்கள், மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக எந்த நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா விவகாரம் குறித்து மீளாய்வு செய்யும் அதேவேளை, சித்திரவதைகளில் தொடர்புபட்ட படையினரை சிறிலங்கா அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
இதனிடையே இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக மன்னிப்புசபை, ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம், சித்திரவதைகளில் இருந்து விடுதலை, சிறுவர்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக முயற்சி, அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அனைத்துலக குறைபாடுகளுக்கான கூட்டமைப்பு, சட்டவாளர் உரிமைகள் கண்காணிப்பகம்-கனடா, லண்டனை தளமாக கொண்ட றீட்றெஸ், றீட்றெஸ் ஆசிய சட்ட வளங்கள் நிலையம் மற்றும் ஏசிஏரி பிரான்ஸ், சிறிலங்கா அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழ் தகவல் நிலையம், சித்திரவதைகளுக்கு எதரான சுவிஸ் அமைப்பான ட்ரயல் ஆகிய 12 அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் ஆராயப்படவுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக