20 பிப்ரவரி 2011

வெள்ளி விழாவில் கறை பூசிய உதயன் நாளிதழ்!

உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.
உதயன் பத்திரிகை தனது 25ஆவது அகவையை எட்டி நிற்கும் பொழுது அது அடைகின்ற ஆனந்தத்திலும் அதனை சார்ந்து நிற்கின்ற வாசகர்கள் அடைந்து நிற்கின்ற பூரிப்பானது எல்லையற்றது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் உதயன் சோர்ந்து விடவில்லை.
உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட போதிலும், அலுவலக சொத்துகள் அழிக்கப்பட்ட போதிலும் சோர்ந்து போகாத உதயன் தன் நேர்த்தியான போக்கில் இருந்து தொய்ந்து போகவில்லை.
உதயனின் ஒவ்வொரு ஆண்டுப் பூர்த்தியின் போதும் உதயனுக்காக உயிர் கொடுத்த ஊழியர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதிப்புக்களை உதயன் வெளியிடவும் பின்நிற்கவில்லை.
வெள்ளிவிழாக் கண்டு நிற்கின்ற உதயன் தனது வெள்ளிவிழா நிகழ்வின் போது, கொல்லப்பட்ட ஊடகர்களுக்கு முதலில் வணக்கம் செலுத்தியமை சிறப்பு.
ஆனால் கொல்லப்பட்ட ஊடகர்களுக்கான முதல் மாலையினை இராணுவ அதிகாரி கேணல் பெரேரா அணிவித்த போது அடுத்த மாலைகளை அணிவிக்கக் காத்திருந்த உயிரிழந்த ஊடகர்களின் பெற்றோரும் உறவினர்களும் குமுறிக்கொண்டதாக நிகழ்வில் பங்குகொண்டிருந்த உதயன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இன்றைய நாள் வெள்ளிவிழாச் சிறப்புக்குரிய நாள் என்பது பெருமைக்குரிய விடயம் தான் ஆனால், தேசத் தலைவனைத் தந்த அன்னையின் பிரிவிற்காக இன்றைய நாளைத் தியாகம் செய்திருக்கக் கூடாதா? என்று உதயன் ஊழியர்களே நிகழ்வில் சென்றவர்களிடம் மனம் நொந்திருக்கிறார்கள்.
வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இன்று தனது பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை இடை நிறுத்தியிருக்கின்றது. குறித்த பாடசாலை நிர்வாகம் உடனடியாகவே இராணுவத்தினரின் நெருக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது.
அதனை விடவும் கல்விச் சமூகத்தின் உயர் மட்டத்திற்கான பதிலையும் அந்தப் பாடசாலை வழங்கவேண்டிய தேவை என்பது ஒருபுறம். அரசை சார்ந்து அல்லது அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் ஒரு பாடசாலையே தனது விளையாட்டுப் போட்டியினை இடை நிறுத்துகின்ற போது தமிழ் தேசியத்தினைச் சொல்லிச் சொல்லியே 25 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் உதயன் பத்திரிகையும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையின் ஸ்தாபகர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களும் சரியான முடிவினை இன்றைய நாளில் எடுத்திருக்க வேண்டும்.
நிகழ்விற்கான கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்கவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமையை காரணமாகக் காட்டி நிகழ்வினை இடை நிறுத்த முடியாது என்று கூறலாம். அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் என்ன?. எந்த இராணுவத்தால் தலைவர் அவர்களின் தந்தையாரும், தாயாரும் நிரந்தர நோயாளிகளாக்கப்பட்டு உயிரிழப்பு வரையில் அவர்களைத் தள்ளும் நிலை ஏற்பட்டதோ அதே இராணுவத்தின் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதேவேளை உடலத்தை பொறுப்பேற்கவோ அதனை பார்வையிடவோ முடியாத அளவிற்கு வல்வெட்டித்துறை வைத்தியசாலையினை முற்றுகையிட்டு இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் அனாதை போல வீரத் தலைவனின் தாயாரின் உடலம் வைக்கப்பட்டிருக்கின்ற அவலம் உதயன் பத்திரகை நிறுவனத்திற்கு தெரியாதா?
தற்போது அரசியல் நீரோட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் சரி, ஊடக நிறுவனங்களும் சரி தமிழீழ விடுதலைப் புலிகளை தவிர்த்து அல்லது விலக்கி நின்று கொண்டு செயற்பட முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை.
உதாரணமாக அண்மையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்குப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதாக தாம் கருதுவதாக உதயனின் தொடக்கம் முதல் கடந்த ஆண்டுவரை ஆசிரியராகப் பணியாற்றிய திரு வித்தியாதரன் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார். இன்றுவரையில் கூட விடுதலைப் புலிகளை விலக்கி அரசியல் செய்யவோ ஊடகத்தில் எழுதவோ முடியாத நிலை என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
இவ்வாறான போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள், தியாகங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்தே பயணிப்பதாகக் காட்டிக்கொண்ட உதயன் இன்றைய நாளில் இத்தனை பெரிய உலகம் வியந்த விடுதலை அமைப்பை கட்டி வழிநடத்திய ஒரு தலைவனை ஈன்ற தாயைப் பற்றி ஒரு வார்த்தையேனும் தனது நிகழ்வின் போது சொல்லியிருந்தால், அவருக்காக ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தியிருந்தால் குற்றம் சாட்டுவதில் நியாயம் இருந்திருக்கப் போவதில்லை.
அவ்வாறாயின் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு என்ன கறிவேப்பிலையா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. விடுதலைப்புலிகளை தமது தேவைகளுக்காக தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தும் போக்கு என்பது கைவிடப்பட வேண்டும். இல்லை, அவ்வாறுதான் இருப்போம் என்றால் சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாது செயலிலும் காட்ட வேண்டும்.
இன்றைய நாளில் உதயனும் அதன் நிர்வாகமும் விட்டிருக்கின்ற வரலாற்றுத் தவறினை எந்த வகையில் நியாயப்படுத்திக் காட்டப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழினம்.
சரிதம் ஆசிரிய பீடம்.
நன்றி:சரிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக