எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீனவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதில்லை என்று இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இணங்கி உள்ளன. மீனவர்களுக்கு எதிராகப் பலப் பிரயோகம் மேற்கொள்ளப் படுவதை நியாயப்படுத்த முடியாது என இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்று நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய பின்னர் இந்தக் கூட்டறிக்கை வெறியிடப்பட்டது.இலங்கை – இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைகளில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேற்றுக் காலை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அவரது அமைச்சில் சந்தித்தபோது தெரிவித்தார். இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் அவர் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன் பின்னர் சந்திப்புக்கள் குறித்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையிலான கடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த இந்திய அரசின் ஆழ்ந்த கவலையை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் வெளியிட்டார்.
இச்சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.எல்லை தாண்டி இலங்கையின் கடல்பரப்புக்குள் வரும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும் என்பதே இலங்கையின் கொள்கை என்பதை இலங்கை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருங்கிய இரு தரப்பு உறவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மீனவர்களின் நலன்களில் தாக்கம் செலுத்தும் எந்த விடயமும் இலங்கையின் மிகுந்த கரிசனைக்குரியதாகும்.அதனால் இச்சம்பவங்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கு இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது. விசாரணைகள் தொடரும் நிலையில் மேலதிக தகவல்களை தருமாறு இந்தியத் தரப்பிடம் இலங்கை கோரியுள்ளது.
தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மீன்பிடி தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் அடுத்த கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது என்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக