
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழலுக்கு அரசாங்கமும் அரச இராணுவமும் அதனுடன் இயங்கும் குழுக்களுமே காரணம். இது தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்கும் இன்னுமொரு யுத்தி என தமிழ் தேசிய முன்னணி குற்றஞ் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் 3ம் குறுக்குத்தெருவில் உள்ள தமது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே தமிழ் தேசிய முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. இம் மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், வரதராஜன், மணிவண்ணன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ் குடாநாட்டில் நடைபெறுகின்ற அசாதாரண சூழலுக்கு அரசாங்கமே காரணம். தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு இதனைச் செய்து வருகின்றது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் புலம் பெயர்ந்தவர்களால் வட பகுதியில் முதலீடுகளைச் செய்து தமது வளத்தினைப் பெற்று பொருளாதார ரீதியில் முன்னேறி விடுவார்கள் என்பதற்காக திட்டமிட்டு அசாதாரண சூழலை உருவாக்கி வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதத்தால் இல்லாமல்ப் போயிருந்தாலும் அது ஜனநாயக ரீதியில் உருவாகியுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எமது கட்சியானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகி மத்திய குழுவை உருவாக்கியுள்ளோம். இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறந்ததொரு யாப்பை உருவாக்கி ஒரு நாடு இரு தேசங்கள் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யவுள்ளோம். எமது ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கை ஏனைய கட்சிகள் போல் மேல்மட்டத்தில் இருந்து கருத்துக்கள் வெளிப்படாது அடி மட்டத்திலிருந்து கருத்துக்களை உருவாக்குவதே எமது குறிக்கோள். இதற்காக நாம் பல கிராமமட்ட அமைப்புக்களைச் சந்தித்து திட்டங்களை வகுத்துள்ளோம்.
காலப்போக்கில் ஏனைய அரசியல் கட்சிகளையும் இதற்குள் ஒன்றிணைப்போம். இலங்கை அரசாங்கம் இன அழிப்பை மேற்கொண்டுவிட்டு மீண்டும் எம்மை ஒடுக்குவதற்காக திட்டமிட்ட செயற்பாடுகளைச் செய்து வருகிறது.இது தொடருமாயின் எகிப்து, லிபியா நாடுகளில் நடந்தவை போலவே இங்கும் நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை. இந்த அரசாங்கம் போர்க் குற்றத்தை கதைக்காது விட்டால் தமிழ் மக்கள் பிரச்சினையைத்
தீர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறிவருவதாக தெரியவருகிறது.
இதற்கு கூட்டமைப்பு இணங்கியதாகவும் தெரியவருகிறது. 13வது அரசியல்த் திட்டத்தை அமுலாக்குவதோ அல்லது வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதோ, தமிழ் மக்களுக்கு தீர்வினைத் தராது. இப் 13வது அரசியல் திருத்தச்சட்டமானது ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. இன்று இதற்குப் போட்டியிடுவதற்குப் பலர் தயார் நிலையில் இருக்கின்றனர். மாகாணசபை என்பது ஆளுனருக்கு மட்டுமே அதிகாரமுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடையாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களேயானால் நாமும் செயற்படத் தயார். 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூட்டமைப்பினர் பகிரங்கமாக அறிவிப்பார்களேயானால் வடக்கு மாகாண சபையில் புத்தி ஜீவிகள் மற்றும் சமூகத்தில் மதிக்கத் தக்கவர்களை அனுப்புவது தொடர்பாக கலந்தாலோசிக்க முடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக