யாழ். குருநகரைச் சேரந்த மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை இந்திய மீனவர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கங்களில் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.அதேவேளை யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து 3 படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டுச் சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மீனவர்கள் ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை முதல் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இது வரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சதீஷ்குமார் தெரிவிகத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்>
குருநகரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் (வயது 60), பாஸீஸியஸ் (49), இராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனர்.
இவர்களின் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் இந்திய எல்லைக்கு நுழைந்தபோது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் இந்நால்வரையும் மடக்கிப் பிடித்து கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் தற்சமயம் மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவ சங்கத்தின் தலைவர் எனக்கு அறிவித்துள்ளார்.
இவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக