வன்னியைச்சேர்ந்த இளைய வயதினோர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லவிடாது மீண்டும் பாதுகாப்புத்தரப்பு கெடுபிடிகளை மேற்கொள்ளத்தொடங்கியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் படைத்தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. யாழ்ப்பாணம் வந்து திரும்பும் இளவயதினரே கூடிய அளவினில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்
படையினரால் மேலதிக விசாரணைக்கென முகாம்களுக்கு அழைக்கப்படும் இவர்கள் அங்கு மீண்டும் விசாரணையெனும் பெயரினில் சித்திரவதைகளுககுள்ளாவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைய வயதினோரே இந்நெருக்குவாரங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களான உறவினர் நண்பர்களும் இவ்விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்படுகின்றனர்.
இவ்விசாரணைக்கெடுபிடிகளால் வன்னியை சேர்ந்த இளம் வயதினரான உறவுகளை தமது வீடுகளுக்கு வராதிருக்குமாறு கோரி வருகின்றனர். குறிப்பாக பொது இடங்களில் தம்மை அடையாளங்கண்டே விசாரணையெனும் பெயரில் இவ்வாறான கெடுபிடிகள் தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
இராணுவப்புலனாய்வுப்பிரிவை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களே தம்மை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்து பிடித்துச்சென்றவர்களெனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக