"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து வந்த எஸ்.பி தமிழ்ச்செல்வன் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி இருக்கவில்லை.
அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர்களை படையினர் வலை வீசி தேடி வந்தனர், படையினரால் தேடப்பட்டோர் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்."
இவ்வாறு தெரிவித்து உள்ளார் விமானப் படைத் தளபதி மார்ஷல் டபிள்யூ. டி.ஆர். எம்.ஜே.குணதிலக.
இவர் விரைவில் கடமையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில் உள்நாட்டு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:-
"புலிகளால் அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்பட்டு சில வாரங்களில் படையினரால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். ஆனால் இது பழிவாங்கல் நடவடிக்கையாக இடம்பெற்று இருக்கவில்லை. புலித் தலைவர்களை மிக நீண்ட நாட்களாகவே தேடி வந்தோம். அரச படையினரால் தேடப்பட்டு வந்த புலித் தலைவர்களில் தமிழ்ச்செல்வனும் முக்கியமானவர்.
புலனாய்வுப் பிரிவினர் சரியான முறையில் தகவல்களைப் பெற்றனர். தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் உள்ளார் என நவம்பர் முதலாம் திகதி புலனாய்வுப் பிரிவினருக்கு மிகவும் உறுதியான தகவல் கிடைத்தது.
எனவே தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை விமானங்கள் மூலம் தாக்கினோம். மிகவும் கடினமான இலக்குதான். ஆனால் எமது விமானிகள் சாதித்து விட்டனர். தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகள் இயக்கத்தை கதி கலங்க வைத்தது. நாம் எப்படி தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை கண்டு பிடித்தோம்? என்பது புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு மூடு மந்திரமாகவே இருந்தது. எனவே நிலத்துக்கு கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களில் பதுங்கி இருந்து கொண்டனர். தலைவர்கள் களத்துக்கு செல்லாமல் இருந்தமையால் புலிகளின் இராணுவ பலம் குன்றியது.
ஈழப் போர்-04 ஐ பொறுத்த வரை புலிகளால் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் மிகப் பேரழிவை படையினருக்கு ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலுக்கு 23 தற்கொலைக் குண்டுதாரிகளை புலிகள் பயன்படுத்தி இருந்தனர்.ஆனால் அங்கு இருந்த எல்லா கட்டமைப்புக்களையும் அவர்களால் அழிக்க முடியவில்லை.
அரசு- தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையிலான 30 வருட கால யுத்தத்தில் படையினருக்கு மிக மோசமான தோல்வி ஆனையிறவு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் வசம் வீழ்ந்ததே ஆகும்.
30 வருட கால யுத்தத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக படையினருக்கு அமைந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கூட்டுத் தலைமை ஆகும். இருவரும் சகோதரர்கள். எனவேதான் அனைத்து விதமான தடைகளையும் உடைத்து புலிகளை வெல்ல முடிந்தது.
இவர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் ராணுவத்தினரால் இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்டு புலிகளிடமிருந்த சில பகுதிகளை கைப்பற்றுவதற்கே ஓர் இரு வருடங்கள் ஆகியிருந்தன,ஆனால் இது தொடர்பாக அப்போது ராணுவத்தளபதிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது புலிகள் அணிகளுடன் முன்னரங்களிலேயே புலித்தலைவர்களும் நின்று தமக்கெதிராக களமாடுவதனாலேயே தம்மால் வெகு சீக்கிரமாக புலிகளின் நிலப்பரப்புக்குள் சுலபமாக நுழைய முடியாமல் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இறுதிப்போரின் போது புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் கள முனையிலேயே தமது தாக்குதல் அணிகளுடன் இருந்து எதிரிக்கு எதிராக களமாடியிருந்தனர் என்பது உலகம் அறிந்த உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக