நினைத்ததைச் செய்து முடிப்போம் எனும் மகுட வாக்கியத்தினை பாடசாலையில் பொறித்ததற்காக பாடசாலை அதிபர் ஒருவரை படையதிகாரி நையப்புடைத்திருக்கின்றார். வடமராட்சி கிழக்கில் மக்கள் அண்மையில் மீளக் குடியேறிய பாடசாலை ஒன்றின் அதிபருக்கே இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் நோக்கங்கள் கருதிய மகுட வாக்கியங்கள் எனப்படும் வாசகங்கள் பாடசாலை மாணவர்களுக்காக வரையப்படுவதுண்டு. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நினைத்ததை செய்து முடிப்போம் எனும் மாணவர்களுக்கான மகுட வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது.
அங்கு வந்திருந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு இந்த வாக்கியம் விடுதலைப் புலிகளது செயற்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்து விட்டது. பாடசாலை அதிபரின் அறைக்குள் புகுந்த அவர் கதவைச் சாத்திவிட்டு அதிபரை நையப்புடைக்கத் தொடங்கியுள்ளார். அதிபர் எவ்வளவோ விளக்கம் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளை மீளவும் வளர்க்கப் போகிறாயா எனக் கேட்டே அவர் மீது தாக்குதல் இடம்பெற்றது.
இதனிடையே குறித்த பாடசாலை எவ்வித சேதமடைந்திருக்காத போதிலும் பாடசாலையின் கூரையை படைத்தரப்பு கொள்ளையடித்து விட்டது. இந்த நிலையில் கூரைகளை திருத்தியமைப்பதற்கு 47 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தது. இந்த 47 லட்சம் ரூபாயை தவறுதலாக 4 கோடியே 70 லட்சம் என வாசித்தறிந்து கொண்ட படையதிகாரி அரசின் நிதியை கொள்ளையிடுவதாகவும் பாடசாலை அதிபரை தாக்கியுள்ளார். அதிபர் இறுதியில் தனது அரைகுறை மொழி அறிவுடன் 47 லட்சம் ரூபாயே வழங்கப்பட்டதாக கூறியதனை அடுத்து பின்னர் தான் 50 படையினரை அனுப்புவதாகவும் படையினரே மேற்பார்வை செய்வார்கள் எனவும் படையதிகாரி கூறிச் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட படையினர் பாடசாலையில் தங்கியிருந்து பாடசாலையில் இடம்பெறும் வேலைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். ராணுவ நெருக்குவாரங்களின் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்வதாகவும் பாடசாலைஅதிபர் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக