மனிதனுக்கு எது திருப்தியோ அதுவே அபிவிருத்தி. ஆனால் யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது அபிவிருத்தி அல்ல அதிருப்தி! என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை போராசிரியர் இ.சிவச்சந்திரன் கூறியுள்ளார்.யாழ்ப்பாண சிந்தணைக் கூடத்தின் ஏற்பட்டில் “யாழ் மாவட்டத்ததை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்?” என்பது தொடர்பான செயலமர்வு ஒன்று அன்மையில் யாழ்.தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு கருத்துரை வழங்கும் போதே இ.சிவச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் சுட்டிகாட்டியதாவது;
பெரிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், வாகன நெரிசல் என்பன அதிகரித்தால் அது அபிவிருத்தியா?; பிரதேச மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?, எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்? என்பதைப் பொறுத்தே அபிவிருத்தி தீர்மாணிக்கப்பட வேண்டும்.
அரசும், பல்தேசிய கம்பணிகளும் சொல்வதை அபிவிருத்தி என்று நம்ப வேண்டாம். ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைந்து வருகின்றது என்றால் பின்வரும் 3 கேள்விகளிற்கு என்ன விடை கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே அபிவிருத்தியை நம்பலாம் என டட்லி சியர்ஸ் என்ற பொருளியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையை போக்க என்ன செய்யப்பட்டது?
வேலையின்மையை போக்க என்ன செய்யப்பட்டது?
பாரபட்சங்களை நீக்க என்ன செய்யப்பட்டது?.
இந்த கேள்விகளை தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களில் பாருங்கள்!.
இலங்கையில் குளிரூட்டிய அறைகளில் இருந்து கொண்டு கிராமங்களிற்கான அபிவிருத்தி திட்டமிடப்படுகின்றது. அத்துடன் அபிவிருத்தி என வரும் போது கல்வியாளர்கள் – திட்டமிடளாளர்கள் – நிர்வாக உத்தியோகஸ்தர்கள்- அரசியல்வாதிகள் ஆகிய நான்கு தரப்பினரும் நான்கு திசைகளை நோக்கி சிந்திக்கின்றார்கள்.
குடாநாட்டில் 30% நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக இன்னும் உள்ளன. மிகவும் செழிப்பான வளங்கள் எங்குள்ளதோ அங்குதான் உயர்பாதுகாப்பு வலயம் அமைக்க வேண்டுமா? ஏன் நிலப் பயன்பாடு குறைவாக உள்ள நெடுந்தீவு, மண்டை தீவு, வேலணை போன்ற பிரதேசங்களில் உயர் பாதுகாப்பு வலயம் அமைந்தால் என்ன. இங்கு தீவுப்பிரதேசங்களை மதிப்பற்றது என்று கூறவரவில்லை.
பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்த விவசாய, கைத்தொழில் முயற்சிகளிற்கு மிகவும் சிறப்பாக உள்ள நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக இன்னும் காணப்படுகின்றதே! தற்போது நவற்குழியில் அமைந்து வரும் சிங்கள குடியேற்றம் என்பது கூட குடாநாட்டின் கழுத்தை நசுக்குவது போலவே பார்க்கப்படுகின்றது.
இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? 365 நாட்களில் சராசரியாக 55 நாட்கள் குடாநாட்டிற்கு மழை கிடைக்கின்றது. எனவே நீர்தேக்கங்களை அமைத்து நீரை சேமிக்கலாம். உப்பாறு, தொண்டமணாறு போன்றன கடல் நீர் கலக்காமல் இருக்கும் நண்ணீர் திட்டம் பற்றி சிந்திக்கலாமே? இதனால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். பிரித்தாணியர் காலத்தில் வரம்பு கட்டி நீரை சேமிக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. அவ்வாறான சட்டங்களை போடலாமே?
வீதிகளை நிரந்தரமானதாக அமைக்க வேண்டும். குறிப்பாக குடாநாட்டின் பிரதான வீதியான ஏ9வீதி வெள்ளம் வந்தால் காணமல் போய்விடுகின்றது. இவற்றில் கவணம் செலுத்தாமல் தற்போது இடம்பெற்று வரும் செயற்பாடுகளை அபிவிருத்தி என்றழைக்க முடியாது என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இச்செயலமர்விற்கு யாழ்.அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு, அரசு சார்பற்ற உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக