14 பிப்ரவரி 2011

புலிகள் மீதான தடையை உடைப்போம்!

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, மத்திய அரசு கடந்த ஆண்டு மேலும் நீட்டித்தது. 'அது சரியா, தவறா?’ என விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரம்ஜித் சென் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்க... அது 'புலித் தடை சரிதான்’ என தீர்ப்பளித்தது.அதை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தியும் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்ய, கடந்த 10-ம் தேதி அதற்கான விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருக்கும் பதிலைக் கேட்டு, 'புலித் தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் இது முதல் வெற்றி’ என பரவசப்படுகிறார்கள், தமிழின உணர்வாளர்கள்!
வைகோ, தன் வழக்குக்குத் தானே வாதாடுவதால், அவருக்கு முன்னுரிமை கொடுக்கலாம்!'' என்று புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சொல்ல, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
அடுக்கடுக்காக வாதங்களை எடுத்துவைத்த வைகோ, ''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், இதில் வழக்குத் தொடர எனக்கு உரிமை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு நேர்மாறாக, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் 6(2) பிரிவின் கீழ், தடையை நீக்க மத்திய அரசை அணுகலாம் என்று பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டுபவரே நீதிபதியாக இருக்க முடியாது. தடை விதித்துள்ள மத்திய அரசிடம்போய் நான் மன்றாட மாட்டேன். இதுபற்றி விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மன்றத்தை நாடி இருக்கிறேன். என சட்ட பாயின்ட்களை எடுத்துவைத்தார்.
இன்னும் அதிகமான ஆதாரங்கள் வைத்திருக்கிறேன்!'' என்று வைகோ சொன்னதும் இந்த மனுவை அனுமதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள். வக்கீல் புகழேந்தியின் மனுவும் அனுமதிக்கப்பட்டது. புலிகள் மீதான தடையை விலக்க ஏப்ரல் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணை பலமாக நடக்க இருக்கிறது.
வைகோவிடம் பேசினோம். ''இந்த மனுவை நீதிபதிகள் அனுமதித்தது மிகப் பெரிய வெற்றி. புலி இயக்கத்தின் தடையின் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் இங்கு வந்து மருத்துவ சிகிச்சையோ, கல்வியையோ பெறமுடியவில்லை. அது மாபெரும் துயரம்.
தடைக்கு எதிராக வழக்குத் தொடுக்க எனக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், 18 முதல் 22-ம் பக்கம் வரை என்ன விவரம் இருக்கிறதோ, அதையே 23 முதல் 27 வரை அப்படியே ரிபிட் செய்து இருக்கிறார்கள். மத்திய அரசு எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
நீதிமன்றம் என் மனுவை அனுமதித்ததால், தடையை உடைக்க முடியும் என்ற நம்பிக்கை பலமாகிவிட்டது! என்றார் மகிழ்ச்சியுடன்.

தடை உடையுமா, பார்ப்போம்!
நன்றி: ஜூனியர் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக