19 பிப்ரவரி 2011

தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டால் போர்க் குற்றச்சாட்டு விலக்கப்படுமாம்!

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் போர் மீறல் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆலோசனைக்கு அமையவே இந்நகர்வு மேற்கொள்ளப்படுவதாகவும் இக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது அறிந்ததே.
இப் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்படும் போர் மீறல் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளுமாறு ஆரம்பத்தில் அரசாங்கத்தினால் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் பட்சத்தில் இந் நிபந்தனையை ஏற்பதற்கு கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதாகவும் இக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர் மீறல் குற்றச்சாட்டுக்காக பணிய வைப்பதை விட அதிகாரப் பரவலாக்கல் வழங்குவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமென அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் துணைச் செயலர் தெரிவித்திருந்தார்.
எவ்விதமான சர்வதேச போர் குற்ற விசாரணைகளுக்கும் ராஜபக்ச அரசாங்கம் அனுமதி வழங்கப் போவதில்லை. இப் புறநிலையில் எல்லோரும் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற போர் குற்றங்களிலும், அதற்குரிய பதில் சொல்லும் பொறுப்புக்கள் மற்றும் தண்டனைகளிலும் அதீத கவனத்தைச் செலுத்துவது நடைமுறைக்கு மாறானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
போர் மீறல் குற்றங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்தை ஒரு அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்வதற்கு அழுத்தம் கொடுப்பதே அமெரிக்காவின் புதிய மூலோபாயமாகவுள்ளது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக்கொண்டிருந்தார். அரசியல் தீர்வைக் காணும் வகையில் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை நடத்துமாறு இந்தியா பல சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்வைக் கோரி வந்துள்ளது.
ஆனால் மகிந்த அரசாங்கம் அது சார்ந்த எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரித்தானியப் பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்தே முதன் முதலாக கூட்டமைப்புடன் ஜனாதிபதி மகிந்த பேச முன்வந்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று தனது தமிழ் நாட்டுக்கான பயணத்தின்போது ராகுல் காந்தி குறிப்பிட்டமையும் மகிந்த த.தே.கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
போர் குற்றங்களுக்கான பொறுப்புக்களைக் கண்டறிவது தொடர்பில் ஐ.நாவினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கைகளைக் கையளிக்கப்படுவதற்குரிய காலக்கெடு அறிவிக்கப்பட்டமையும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்குரிய மற்றோர் காரணம் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக