09 பிப்ரவரி 2011

புலம்பெயர் தமிழர்கள்தான் தீர்வுக்கு தடையாம்!

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என புலிகளின் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சுமத்தினார்.அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான தேவைகளை சபையில் விவரித்துப் பேசும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,போர் முடிவுற்ற நிலையில் அரசு பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 11 ஆயிரத்து 600 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆறாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒரு பிரிவினர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகின்றது.
சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பணம் மற்றும் ஆயுதம் வழங்க உதவி செய்துவந்த புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.சுவிட்ஸர்லாந்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்க நிதி உதவி செய்த பத்துப் பேரை சுவிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுவிஸ் அரசு புலி ஆதரவாளர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்தி உள்ளது.
இதேவேளை, கனடா அரசு புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளையும், சொத்துகளையும் முடக்கி வைத்துள்ளது.இப்படியான நிலையிலும் நாம் வடக்கு, கிழக்கு உட்பட இங்கு வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு ஈடுபாட்டுடன் முயற்சித்து வருகின்றோம்.
ஆனால், அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என மீண்டும் கோஷங்களை ஆரம்பித்துவிட்டனர்.யுத்தம் முடிந்துவிட்ட நிலையிலும் பல பொலிஸ் பிரிவுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சில குழுக்கள் ஆயுதங்களுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
எனவே, நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. துரதிர்ஷ்டவசமாக காலநிலை மாற்றத்தினால் வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எமது நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் இப்படியான அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், நாம் பாதிப்பட்டவர்களுக்கு அவசியமான உதவிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சியினர் அரசை விமர்சிப்பதை கைவிட்டு, நாட்டு மக்கள் மத்தியில் உணர்வுகளைத் தூண்டிவிடாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக