13 பிப்ரவரி 2011

கே.பியை தேர்தலில் களமிறக்க அரசு முயற்சி!

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் தலைவர்களில் ஒருவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனைக் களம் இறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சமிக்ஞையை பிரதமர் டி.எம்.ஜயரத்ன வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்க முடியுமானால் கேபி வடக்கு மாகாண முதலமைச்சராக வருவதில் என்ன சிக்கல் இருக்கின்றது என்று கேள்வி எழுப்பி உள்ளார் .கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பிரதமர் பேட்டியளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சுதந்திரக்கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் அடிப்படை உறுப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கேபிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதில் பிரச்சினைகள் இல்லை. அவரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக ஆக முடியும். கேபியைக் கொல்லுவதோ பாதுகாப்பதோ எமது பொறுப்பு அல்ல. அவரை வைத்து வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டி எழுப்புவதே அரசின் திட்டம். அவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்கி வடக்கின் அபிவிருத்தியை முன்னெடுப்பதே எமது விருப்பமாகும்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இருப்பது போன்று வடக்கின் முதலமைச்சராக விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதன் மூலமே வடக்கு, கிழக்கை மீளக்கட்டி எழுப்பி மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீராக்க முடியும்.
அதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளித்து வருகின்றோம். அவர்களின் இயல்பு வாழ்வுக்கான சகல உதவிகளையும் அரசு வழங்கும். அவர்களின் திருமண வாழ்வு முதல் சகலவற்றுக்கும் அரசு உதவும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக