15 பிப்ரவரி 2011

முட்கம்பி வேலிக்குள் இருந்து ஒரு மடல்... !

எப்போது வெளியே வருவோம் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. இதனால் பெரும் அவலத்தை எதிர்நோக்குகின்றனர் அவர்கள்.
பொழுதுகள் ஒவ்வொன்றும் விடிகின்ற வேளைகளில் விடுதலைச் செய்தி ஏதும் காதில் எட்டிவிடாதா என்ற ஏக்கங்களுடன்தான் விடிகின்றன. இந்த ஏக்கங்கள் சற்றுத் தொலைவாகிப் போய்விட்டதையும் உணர்கின்றோம். டிசெம்பர் 31 இந்த நாள் எதிர்பார்ப்புக்கள், கற்பனைகள், ஏக்கங்களை எம்மனதில் விதைத்துவிட்டிருந்த நாள்.
எம்மைச் சந்தித்த இராணுவ உயரதிகாரிகள் கூட எமது முட்கம்பி வாழ்வின் இறுதி நாளாக இந்த நாளையே நிர்ணயித்திருந்தனர். எமது கனவுகள் கற்பனைகளைச் சிதறடித்த அந்தநாள் கடந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. நீடிக்கப்பட்டுள்ள எமது முட்கம்பி வாழ்வின் முற்றுப்புள்ளி யாருக்கும் தெரியாது.எமது வலிகளைத் தெரிந்திருந்தும் மறந்து விட்ட எமது உறவுகளுக்காக இம்மடலை வரைகின்றேன். எமது மனசாட்சியைத் தொட்டு நாம் உணர்கின்றோம். இதுவரை நாம் செய்த தப்புகள் இரண்டு.ஒன்று தமிழனாகப் பிறந்தது. மற்றையது வன்னியில் வாழ்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடத் தமிழனாகப் பிறந்து வன்னியில் வாழ்ந்திருந்தால் எங்களோடு தடுப்பு முகாமில்தான் இருந்திருப்பார்.
இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் யார் இருந்திருந்தாலும் இவ்வாறுதான் நடந்திருக்கும். இதை எங்களுடைய உறவுகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். போராட்டத்தின் நியாயத்தன்மை, வழி நடத்தல், அசௌகரியங்கள், நன்மைகள், தீமைகள், அரசியல் என்பவற்றை விடுத்து, எங்களுடைய தனிமனித உணர்வுகளை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.எக்கணமும் இறக்கலாம் என்ற நிலையில் கொலைக்களத்தில் எமது நிம்மதிகளைத் தொலைத்து நின்றோம். எமது சொந்தங்களைப் பிணந்தின்னிப் பீரங்கிகள் வேட்டையாட எஞ்சிய உறவுகளுக்காக எமது உயிர்களைக் கையிற் பிடித்து இராணுவத்தினரிடம் சரணடைந்தோம்.எமது குடும்பங்களுடன் இணைந்து நாங்கள் நிம்மதியாக வாழமுடியும். இழந்துவிட்ட எமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கைகளோடுதான் இராணுவக் கட்டுப்பாட்டை நாடினோம்.
எதிர்ப்பார்ப்புகள் ஏதும் ஈடேறவில்லை. முட்கம்பிச் சுருள்களுக்குள் இரண்டாவது ஆண்டு கழியவிருக்கிறது.எங்கள் குடும்ப வாழ்க்கைத் தரமோ அடிமட்டத்தை நெருங்குகிறது. எங்களைப் போன்றோரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள் மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளன.பிள்ளைகளின் கல்வி, அன்றாட வாழ்வியல் என்பதற்கு அப்பால் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே கையேந்தும் நிலைக்கு எமது குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
குடும்பச்சுமை, மனச்சுமை, எதிர்கால ஏக்கங்கள், உடற்தளர்வு என்று எமது மனநிலையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட வெளியே சொல்ல முடியாத பல பிரச்சினைகளுடன் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.எமது விடுதலைக்கனவு நீண்டு கொண்டு செல்வதற்கு நீங்களும் ஒரு காரணம் என்பதுதான் கசப்பான ஓர் உண்மை.எமது யாழ்.மண்ணில் அண்மைய நாள்களில் நடந்த சில பாரதூரமான சம்பவங்களின் பிற்பாடு எழுந்தமானமாக மக்களால் வெளியிடப்பட்ட சில ஊகங்களே இதில் முக்கிய காரணமாக அமைகிறது. "புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள்'' என்ற பதம் சில சமூக விரோதிகள் தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் கவசமாக மாறியுள்ளது. இந்தச் சமூக விரோதிகளின் சூழ்ச்சித் திட்டமிடல்கள்தான் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீது சாயம் பூசப்பட்டாலும் உண்மையில் இதன் பின்னணி விளைவுகள் விடுதலை இன்றி தடுப்பினுள் வாடும் எம்மைத் தான் நேரடியாகப் பாதிக்கின்றன. உண்மைக் குற்றவாளிகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகின்ற போதும், உங்களின் தவறான ஊகங்களின் விளைவுகள் நீங்கமாட்டாது.உறவுகளே, தயவாக இதைப் புரிந்துகொண்டு சதிகாரர்களின் சூழ்ச்சிகளுக்குத் துணை போகாமல் இருந்து எமது விடுதலைக்கனவை ஈடேற்றுவீர்கள் என்று நம்புகின்றோம்.
இன்னுமொரு தடைக்கல் அரச அதிகாரிகளின் சில கருத்துகள் கிராம சேவகர்கள் முதல் அரச உயர் அதிகாரிகள் வரை இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றமைதான் கவலைக்கிடம். "முன்னாள் போராளிகளைச் சமூகத்தில் இணைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.'' இது அடிக்கடி அரச அதிகாரிகளால் கூறப்படும் ஒரு வசனம்.எமது விடுதலை நாளை நீடிப்பதற்கு இந்த ஒரு வரியே அவர்களுக்குப் போதுமானது என்பதை இவர்கள் அறிந்திருக்கமாட்டார்களா?
உண்மையில் நீண்டகாலத்தின் பின்னர் சமூகத்தில் இணையும் ஒருவனுக்கு எத்தனை பிரச்சினைகள் இருக்கும். அதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டியது உங்கள் கடமையல்லவா? பிரச்சினைகளை உங்களிடம் தானே கூறவேண்டும். அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை விடுத்து "அவன் பிரச்சினைக்குரியவன்" என்ற முத்திரையைக் குத்திவிடலாமா? உண்மையில் உங்களது பொறுப்பற்ற செயல்கள் எங்களின் விடுதலையில் அல்லவா உதைக்கிறது.
வேலைப்பளுவைக் குறைக்கும் உங்கள் உத்தியும் அசட்டையும் எங்களின் குடும்ப வாழ்வியலைப் பாதிப்பதை உணரமாட்டீர்களா? உங்கள் நொண்டிச் சாட்டுகளின் விளைவுகள் ஏற்படுத்தும் விபரீதத்தைப் புரிந்துகொள்ளவே மாட்டீர்களா? உங்களின் அன்பான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மூலம் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைச் சமூகத்தில் நல்லவகையில் பிரகாசிக்க வைக்க முடியும். அதன் மூலம் எங்கள் விடுதலையையும் விரைவுபடுத்த முடியும் என்பதைத் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
"பட்ட காலில் படும்" என்பது போல எமது அவல வாழ்வு வருடக்கணக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது வலிகளை எழுத்தினில் வடித்து உணரவைக்க முடியாது. எங்களதும் எங்கள் குடும்ப நிலைகளிலும் இருந்து நோக்கும் போதுதான் எமது வலிகளை உங்களால் உணரமுடியும்.ஆத்மீகம், பண்பாடு, சமூக கட்டமைப்புக்கள், கல்வி, விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் சிறப்புற்று விளங்கும் எமது யாழ்.மண் குறிப்பிட்ட இளைய தலைமுறை ஒன்று படும் வேதனையைக் கண்டும் காணாமல் விட்டு விட்டதுதான் எமக்கு வேதனையளிக்கிறது.
இந்து, கிறிஸ்தவ சமயப்பெரியார்களாயினும் சரி, சமூகத் தலைவர்களாயினும் சரி, புத்திஜீவிகள் அல்லது அரசியலாளர்கள் ஆயினும் சரி யாருமே இதுவரை எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை.இரண்டு வருடங்களாக எம்மைப் பிரிந்து வாடிக் கொண்டிருக்கும், எமது குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கயாருமே இதுவரை முன்வரவில்லை.
இரண்டு வருடங்களாக உங்கள் மனதில் தோன்றாத ஒன்றை நினைவுபடுத்தி உங்களிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை.உறவுகளே, உங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். எங்களின் விடுதலை நாளுக்காய் மீண்டும் காத்திருக்கின்றோம். இப்படிக் காத்திருந்து முன்னர் ஏமாந்ததைப் போல மீண்டும் ஏமாற விரும்பவில்லை.
எமது விடுதலைக் காலம் நீடிக்கப்பட்டமைக்கு, முன்னர் கிடைத்த காரணம் மீண்டும் எமக்குக் கிடைப்பதை நாம் விரும்பவில்லை.சில சமூக விரோதிகளுக்காகத் தயவு செய்து எங்களைப் பாரம் சுமக்க வைக்காதீர்கள்.
உங்களை அறியாமல் உங்களால் பேசப்படும் சில தவறான கருத்துக்கள் சில நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பூதாகரப்படுத்தப்படுகின்றன, திரிபுபடுத்தப்படுகின்றன. அவை எம்போன்ற அப்பாவி இளைஞர்கள் வாழ்வில் தடைக்கற்களாக இனியும் இருக்க வேண்டாம்.சில கீழ்த்தரமான சுயலாபம் தேடும் சூழ்ச்சிக்காரர்களின் சதிவலைக்குள் சிக்கி விடாதீர்கள். எங்களது நிலைமையினை உணர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டே தடுப்புக்குள் வாடிக்கொண்டிருக்கின்றோம்.
எனவே, எங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாங்களும் வாழத்துடிக்கும் மனிதங்கள் என்பதை உணர்ந்து கொண்டால் அதுவே எமக்குப் போதும். சில குற்றவாளிகள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைப் பலிக்கடா ஆக்க முனைகிறார்கள்.
இதில் உண்மையில் பாதிக்கப்படுவது விடுதலையின்றி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் நாங்களே!உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்தச் சதிகாரர்களின் சூழ்ச்சிகளை நம்பாதீர்கள். உங்கள் நா இவ்வாறான எழுந்தமானக் கருத்துக்களை இயம்பி இளைய சமூகம் ஒன்றை மீண்டும் முள்கம்பிக்குள் முடங்க வைக்காது என்று நம்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக