27 பிப்ரவரி 2011

இன அழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை அவசியம்!

இலங்கையில் நடந்தது போர்க்குற்றங்களல்ல. அது இன அழிப்பு நடவடிக்கை பலரும் கடந்த மூன்று வருடங்களில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கடந்த முப்பது வருடங்களாக நடத்தப்பட்ட இன அழிப்புப் பற்றி விசாரணை இடம்பெற வேண்டுமெனக் கோருகின்றோம் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
யாழ். நரிகல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெவிக்கையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் மாறி மாறி ஆட்சியேறிய பிரேமதாஸ , சந்திரிகாவென தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு தொடர்ந்து தற்போதைய மஹிந்த ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களில் அது உச்சம் பெற்றுள்ளது.
பலரும் போர்க் குற்ற விசாரணைகள் இடம் பெற்று குற்றமுடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்கின்றனர். இதனால் தமிழ் மக்களது பிரச்சினைக்கு என்ன தீர்வு கிட்டப் போகின்றதென்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழர்கள் தொடர்பில் சர்வதேசம் அக்கறை கொண்டுள்ளது. கடந்த 60 வருடகால போராட் டம் அதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பிலாகவும் அது இருக்கலாம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் சர்வதேசமோ மஹிந்த ஆட்சியி லான கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்களிலேயே அக்கறை காட்டுகின்றது. ஆனால் எமது கட்சியோ போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்திற்கு ஆர்வமெனில் கடந்த 30 வருடகால போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைக்கான தேர்தலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிஷ்கரிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மாகாணசபைத் தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டுமென பகிரங்க மாக அழைப்பும் விடுக்கின்றோம். இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பது தொடர்பிலும் தேவையாயின் கட்சிகள் சாராத பொதுவேட் பாளர்களை நிறுத்துவது தொடர்பிலும் சில பொதுவான விடயங்களை விட்டுக்கொடுத்து சமரசத்துக்கு வர நாம் தயாராக இருக்கிறோம்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பு தேசியவாதக் கொள்கையை கைவிட்டு இப்போது பெயரில் மட்டும் தேசியத்தைக் கொண்டிருக்கின்றது. எந்தக் கொள்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ , அதே கொள்கை மூலத்திற்கு கூட்டமைப்பு திரும்புமானால் சிலபொதுவான விடயங்களை விட்டுக் கொடுத்து அதனுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். குறிப்பாக 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை எமது கட்சி போன்றே, கூட்டமைப்பும் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
கூட்டமைப்பில் பலர் இப்போது முதலமைச்சர் கனவுகளுடன் இருக்கின்றார்கள் தாங்கள் போட்டியிடாவிட்டால் தேவையற்றவர்கள் வந்துவிடுவார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர். அவ்வாறானதோர் சூழல் ஏற்படுவதை தவிர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட கட்சி சாராத , சமூக மதிப்புள்ள தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற குழுவொன்றை தேர்தலில் நிறுத்தலாம். அக்குழுவிற்கு கூட்டமைப்புடன் இணைந்து ஆதரவளிக்க நாம் தயாராகயுள்ளோம்.
ஏற்கனவே 1989 ஆம் ஆண்டினில் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை , அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தது. எந்தவொரு பயனுமற்றது மாகாண சபையெனக் கூறி அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு மகஜரொன்றும் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஒப்பமிட்டவர்களில் கூட்ட மைப்பின் தலைவரான சம்பந்தனும் ஒருவர்.
13 ஆவது திருத்த சட்டத்தின் கீழான தீர்வை ஏற்றுக்கொண்டால் அதன் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியம் பற்றிப்பேசுவதற்கு சட்டரீதியாக இடமின்றிப்போகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக