05 ஏப்ரல் 2014

கிளிநொச்சியில் படைகளின் பலவந்தக் கொண்டாட்டம்!

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களியாட்ட நிகழ்ச்சியில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கலந்துகொள்ளக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக்கட்டளைத் தலமையகம் எச்சரித்துள்ளது.
இதனால் குறித்த நிகழ்ச்சியின்போது இராணுவத்தினரை உசார் நிலையில் வைத்திருக்கவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவக்கட்டளைத் தலமையகம் முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இந்துப் புத்தாண்டு கொண்டாட்டம் என்று கிளிநொச்சி எங்கும் பதாகைகளை வைத்து களியாட்ட நிகழ்வுகளில் மக்களை கலந்துகொள்ளுமாறு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்திருந்தனர். கிராமம் கிராமாகவும் சென்று இதற்கான பிரசார வேலைகளையும் அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் வட மாகாணத்திலும் கிளிநொச்சியிலும் பயங்கரவாத்துடன் தொடர்புடைய பலர் பதுங்கி உள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தரப்பு இன்றைய நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்ளக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறானவர்கள் வந்தால் கைதுசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தரப்பு குறிப்பிடுகின்றது. இதேவேளை பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் நோக்கில் சிவில் உடையில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
இன்று காலை முதல் கிளிநொச்சியில் உள்ள சில பின் தங்கிய கிராமங்களுக்கு பேரூந்துகளைக் கொண்டு சென்று சிங்கள இந்துப் புத்தாண்டை கொண்டாட வருமாறு இராணுவத்தினர் மக்களை பலவந்தப்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக