16 ஏப்ரல் 2014

அரசுக்கு எதிராகச் சாட்சியமளிக்க முன்னாள் படை அதிகாரிகள் தயார்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஏற்பாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், தென்னிலங்கைத் தரப்பிலிருந்து  அதுவும் படைத்தரப்பிலிருந்தே வலுவாக முன் வைக்கப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் அரசுத் தலைமைக்குக் கிட்டியிருக்கின்றதாம்! இதனால் அரசுத் தலைமை அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சில கொழும்பில் 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் காலத்தில் படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலர் யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசுத் தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கு நாடுகள் சில ஏற்கனவே பதிந்து வைத்திருக்கின்றன என்றும், மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப சான்றுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களுடன் அந்த சாட்சியங்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் முன்னால் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்றும் இலங்கை அரசுத் தலைமைக்குத் தற்போது நம்பகமாகத் தெரிய வந்திருக்கின்றதாம். சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்களுள் ஒருவர் இராணுவத்தின் மிக உயர்ந்த தர நிலையில் பதவி வகித்த, பெரும்பான்மையினரின் மதமான பௌத்தத்தைச் சாராத பிற மதம் ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளின் சாட்சியங்களுக்கு மேலும் வலுவூட்டும் விதத்தில் வைக்கப்படக்கூடிய படைத் தரப்பு சாட்சியங்கள் மிகப் பாரதூரமான விளைவுகளை சர்வதேச மட்டத்தில் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு ஏற்படுத்தும் என்பது ஆட்சித் தலைமைக்கு எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் ஆட்சித் தலைமை ஆடிப்போயிருப்பதாகவும் கூடத் தகவல். இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால், அவ்வாறான சாட்சியங்களை மறுத்துரைக்கும் விதத்தில் நேரடியாக அத்தகைய மன்றில் ஆஜராகி சான்றளிக்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தயாராக இருக்கின்றார் என்ற தகவல் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் அரசுத் தலைமைக்குக் கோடிகாட்டப்பட்டுள்ளதாகவும் - ஆனால், அதத்தகைய விவகாரத்துக்கு இணங்கி இடமளித்து, அந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது தென்னிலங்கை அரசியலில் சரத் பொன்சேகாவுக்கு கதாநாயகன் அந்தஸ்தைத் தேடிக் கொடுத்து அவரைப் பெரிய ஆள் ஆக்கி, தமக்கு அரசியல் பின்னுதைப்பை வாங்கித் தந்துவிடும் என்பதால் அந்த யோசனையை அரசுத் தலைமை சாதமாகப் பரிசீலிக்கவேயில்லை எனவும் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக