25 ஏப்ரல் 2014

நீதிபதி சதாசிவம் தலைமையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பு வரும் வரை, சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அது நீட்டித்திருக்கிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, இந்த மூவரையும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட வேறு நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு பற்றி மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கெடு விதித்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில், இந்த வழக்கு முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்புவதால்,இது குறித்து ஒரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வெளியிட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கில் விசாரிக்க ஏழு முக்கிய அரசியல் சட்ட கேள்விகளையும் அது வரையறுத்தது.
மரண தண்டனை ஆயுள் தண்டனையாக , உச்சநீதிமன்றத்தாலோ, அல்லது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநராலோ குறைக்கப்பட்ட பின்னர், அதை மேலும் மாற்றியமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது இதில் முக்கியமான கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக