23 ஏப்ரல் 2014

வவுனியாவில் திலீபனை தேடுகிறதாம் சிங்கள புலனாய்வுத்துறை!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்கியதாக கூறி வவுனியா நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து வவுனியாவில் தேவிகன் அவர்கள் வசித்த வீடு கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவருடன் இணைந்து நெருக்கமாக செயற்பட்டவர்கள் தொடர்பாகவும் தகவல்களைப் பெற்ற புலனாய்வு துறையினர் விடுதலைப் புலிகளின் விமானப்படையைச் சேர்ந்த தேவிகன் என்பவருடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்ததாக வவுனியா வடக்கு வலய பாடசாலை ஆசிரியரான திலீபன் என்பவர் மீது தமது கவனத்தை செலுத்தினர்.
ஆனால், கடந்த 8 ஆம் திகதி பாடசாலை லீவு விடுவதற்கு முன்பாகவே அ.திலீபன் என்ற ஆசிரியர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து திலீபன் என்பவர் வசித்து வந்த வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள வாடகை வீடு ரிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா நகர பஸ் நிலையப் பகுதியில் திலீபனால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திலீபன் கற்பித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்தோர் எனப் பலரிடமும் துருவி துருவி விசாரணைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் மூலம் தேவிகன் வசித்த வவுனியா வீடு திலீபன் என்பரின் திட்டமிடலில் கட்டப்பட்டது என உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு பலதடவை சென்று வந்துள்ள திலீபன் தேவிகனுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேவிகன், திலீபன் ஆகியோருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக கூறி பலர் மீது விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதன் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ் நல்லூர் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஹய்சஸ் வாகனம் ஒன்றினை ரிஐடியினர் கைப்பற்றியுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்ட இவ் வான் திலீபனின் பெயரில் 35 லட்சம் ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேவிகனே இதனை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தேவிகன் வசித்த வீடு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்காணி உரிமையாளர், அவ் வீட்டுக்கு வந்து சென்றவர்கள், தேவிகனின் வாகனம் என்பன ரிஐடியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் தீவிர விசாரணையால் மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக