22 அக்டோபர் 2012

கிளிநொச்சி வர்த்தகரின் 50 இலட்சம் பெறுமதியான பொருட்களை கையாடிய பொலிஸ்!

கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், தன்னிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்தார் எனக் கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம் ஒன்றை இ.ஜெயசிங்கம் என்பவர் நடத்திவருகிறார். கடந்த ஓகஸ்ட் மாதம் சகோதரி ஒருவரின் மரணச் சடங்குக்காக அவர் கொழும்பு சென்றுள்ளார். அப்போது சந்தேகத்தின் பேரில் குறித்த வர்த்தகர் ஜாஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் அவ்வாறு விளக்கமறியலில் இருந்த சமயத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவருடன் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குறித்த பொலிஸ் அதிகாரி வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
“உனது கணவர் எங்களிடம் வாங்கிய கடனை தராமல் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். எனவே கடன் பெறுமதிக்குரிய பொருள்களைத் தரவேண்டும்”. என்று வர்த்தகரின் மனைவியிடம் கூறியதுடன், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் வர்த்தகரின் மனைவியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து, குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த சுமார் ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இம்மாத முற்பகுதியில் குறித்த வர்த்தகர் விடுதலையானார். அதன் பின்னர் அவருக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்தது. இது பற்றி அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் அவரை அச்சுறுத்தியதுடன் முறைப்பாட்டை ஏற்கவும் மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் தனக்குச் சொந்தமான ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்துள்ளனர் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக