07 அக்டோபர் 2012

இந்த அரசாங்கத்தை எந்த ஒரு பிசாசுடன் சேர்ந்தாவது அகற்ற வேண்டுமென நான் விரும்புகிறேன்: - மனோகணேசன்

யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார்.
இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட்டது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். இப்போதும் தினந்தோறும் வெளியேறி கொண்டிருகின்றார்கள். இதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று பேரினவாதம் முழு இலங்கையையும் சிங்கள பெளத்த மயமாக்கும் திட்டத்தை வெகு வேகமாக செய்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணம் பறி போய் விட்டது. திருகோணமலையும்., அம்பாறையும் இன்று தமிழரது மாவட்டங்கள் இல்லை. கிழக்கில் தமிழர் கணிசமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களினால் சுற்றிவளைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்துக்கு உள்ளேயும், புதிய வலயங்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன.
இப்போது வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு சிங்கள மாவட்ட அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல தமிழ் பகுதிகள் திருகோணமலையின் சிங்கள பகுதிகளுடன் சேர்க்கப்படுகின்றன. திருகோணமலையின் சிங்கள பகுதிகள், முல்லைதீவுடன் சேர்க்கப்படுகின்றன.
திருமுருகண்டி, கோப்பேபிலவு பகுதிகளில் மிகப்பெரும் இராணுவ குடும்ப குடியிருப்புகள் சீன உதவியுடன் கட்டப்படுகின்றன. மன்னாரிலும் அப்படியே. வன்னி பெருநிலத்தில் சிங்கள இராணுவ குடும்பங்களை குடியேற்றி இன குடி பரம்பல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது அரசின் திட்டம். கிழக்கை போன்று முல்லை, வவுனியா, மன்னார் உள்ளடங்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தையும் சிங்களமயமாக்குவது அவர்களது இலக்கு. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இவை நடந்து முடிந்துவிடும்.
அதுவரை, இலங்கை அரசும், இந்தியாவும், அமெரிக்காவும் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும்.
தமிழ் தலைமைகளிடம் இதற்கு எதிராக காத்திரமான வேலைத்திட்டம் எதுவும் இருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை. சர்வதேசம், சர்வதேசம் என்ற மந்திர உச்சாடனம் மட்டும் கேட்கின்றது. ஆனால், இந்த மந்திரம் மட்டும் தீர்வுகளை கொண்டு வந்து விட போவதில்லை என்பது எனக்கு தெரியும்.
வரலாற்று பெருமைகளையும், அன்று ஒருநாள் இருந்ததாக சொல்லும் உரிமைகளையும் பற்றி இப்போது வெளிநாடுகளில் இருந்து பேசிகொண்டிருப்பதில் எந்த பலனும் கிடையாது. இந்த பேச்சுகளை பேரினவாத ஆக்கிரமிப்பாளர்கள் எந்த விதத்திலும் கணக்கில் எடுப்பது இல்லை.
இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நான் பயன்படுத்த முன்னின்று செயல்படுகிறேன். சரத் பொன்சேகா என்பவரும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம்தான்.
அவரும் ஒரு கொலைக்காரர், போர் குற்றவாளி என்று சிலர் எனக்கு இப்போது அறிவுரை கூறுகிறார்கள். எனக்கு என்ன, இது எதுவும் தெரியாதா? இவர் மட்டும் அல்ல, எனக்கு இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களை பற்றியும் நன்கு தெரியும்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், வேறு எந்த தமிழ் அரசியல் தலைவர்களை விட எனக்குதான் இவர்களை நன்கு தெரியும். ஏனெனில் நான்தான் இவர்கள் எல்லோரிடமும் பழகி அவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறேன். எனவே, சரத் பொன்சேகா உட்பட, சிங்கள அரசியல் தலைவர்கள் பற்றி எனக்கு இந்த அறிவுரைகளை கூறி நேரத்தை வீணடிக்காதீர்கள். அவை எனக்கு தேவையில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
இலங்கையை ஆண்ட அனைத்து அரசாங்கங்களும் பேரினவாத கொள்கைகளைத்தான் பின்பற்றின. இது அடிப்படை உண்மை எனக்கு பால பாடம். ஆனால், இந்த மகிந்த அரசைபோல் எந்த ஒரு அரசாங்கமும், இந்த அளவுக்கு அப்பட்டமான, இனக்கொலை அரசாங்கமாக இருக்கவில்லை. இந்த அரசைப்போல் தமிழனின் இருப்பை எவரும் அழிக்கவில்லை. தமிழர் வாழ்வின் எல்லாவித அம்சங்களையும் தேடி, தேடி தாக்கி அழிக்கவில்லை.
எனவே இந்த அரசாங்கத்தை எந்த ஒரு பிசாசுடன் சேர்ந்தாவது அகற்ற வேண்டுமென நான் விரும்புகிறேன்.
எனவேதான்,
(01 ) முதலில் நாட்டைவிட்டு வரையறை இல்லாமல் தமிழர் வெளியேற கூடாது என சொல்லுகிறேன். அதன் அர்த்தம் இங்கு உள்நாட்டில் நிலைமை சீராகிவிட்டது என்பது அல்ல. ஆனால், நாம் நாட்டில் இருந்து போராடவேண்டும். வேறு வழியில்லை. எங்களுடன் இணையுங்கள்.
(02 ) அதேபோல், ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டவர்கள், தமிழ் மாகாணங்களில் இந்த அரசுக்கு எதிராகவும், நாடுமுழுக்க இந்த அரசை அகற்றவும், இங்கே நாம் நடத்த விளையும் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க எமக்கு காத்திரமான முறையில் உதவ வேண்டும்.
இவை நடைபெறாவிட்டால், இங்கு தமிழர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான். இதுதான் இங்கு இன்று நிலவும், (ground situation) யதார்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக