21 அக்டோபர் 2012

கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் கூட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்கியுள்ள கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் இதற்காக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடில்லி செல்வதற்கு முன்னதாக, அதில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல்கட்சியாகப் பதிவு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடி விரைவாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
அதற்கு, இந்தியப் பயணத்தை முடித்து திரும்பியதும் இதுபற்றிக் கலந்துரையாடுவதாக இரா.சம்பந்தன் பதிலளித்திருந்தார். இந்தியப் பயணத்துக்கான குழுவைத் தெரிவு செய்வதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் குழப்பங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. புதுடில்லிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் சென்றிருந்தனர். ஏனைய கட்சிகளின் சார்பில் மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் இதில் இடம்பெறவில்லை.
புதுடில்லிக் கலந்துரையாடல்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவும் குழப்பநிலையை அறிந்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, இது தேனீர்கோப்பைக்குள் நடக்கும் சூறாவளி மட்டுமே என்று இரா.சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
புதுடில்லி பயணத்தை முடித்து திரும்பியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தை கடந்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எல்லா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்வதற்கு வசதியாகவே வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது, தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்துக்குப் பதிலாக பொதுவான சின்னம் ஒன்றைத் தெரிவு செய்வது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக