31 அக்டோபர் 2012

ஐ.நாவில் எந்த உறுதிமொழியும் வழங்கமாட்டோம்!சிறீலங்கா சொல்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின்போது பொறுப்புக்கூறும் கடப்பாட்டை இலங்கை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், குறித்த கூட்டத்தொடரில் எந்தவொரு வாக்குறுதியையும் தாம் அளிக்கப் போவதில்லை என்று இலங்கை ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.
அத்துடன், குறித்த கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் தொடுக்கப்படும் கேள்விக்கணைகளுக்கு உரிய வகையில் பதிலடிகொடுக்கத் தாம் தயார் என்றும் இலங்கை அரசு சூளுரைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் ஆரம்ப கட்ட அமர்வுகள் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றன.
குறித்த கூட்டத்தொடரில் இலங்கைக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்துக் கேட்டபோதே இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளவை வருமாறு:
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம். குறிப்பாக மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளதுடன், இவற்றில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும்.
காலக்கிரம மீளாய்வு அமர்வுகளின்போது இலங்கை தன்னார்வ அடிப்படையில் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்காது. அதேவேளை, குறித்த கூட்டத்தொடரில் இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் கண்காப்பு நாடுகளாக உள்ளன. 19 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கூறப்பட்ட நாடுகள் வாக்களித்திருந்தது  தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக