28 அக்டோபர் 2012

லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் பேரவை மாநாட்டில் தி.மு.க.விற்கு முக்கியத்துவமா?

லண்டனில் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கும், பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர், இந்த மாநாட்டை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை தமிழர்களின், மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,சபை, மற்றும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுக்களை கொடுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஐ.நா., சபையில் அளிக்கவுள்ள, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் வரைவு மனு காட்டப்பட்டு, அவரது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இம்மாதம், 30ம்தேதி, சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படுவது குறித்தும், அங்கே உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், யார், யாரை சந்திக்க இருக்கிறோம் என்பது பற்றியும், கருணாநிதியிடம் விளக்கப்பட்டுள்ளது.
ஐ.நா., சபையில், மனுவை அளித்துவிட்டுத் திரும்பும் நிலையில், அடுத்த மாதம், 6ம்தேதி லண்டனில் நடைபெறவுள்ள, "பிரிட்டன் தமிழர் பேரவை' சார்பில் நடைபெறும் தமிழ் மாநாட்டில் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். லண்டன் மாநாடு நிகழ்ச்சிகள், மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை தமிழர்களின் மனித உரிமை மீறல், அவர்களுக்கு மறுவாழ்வு, அரசியல் அதிகாரம், வாழ்வுரிமை குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க, அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஒருவர் அழைக்கப்பட்டார். அவர் லண்டன் செல்ல கட்சித்தலைமை அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது. ம.தி. மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். கோர்ட் உத்தரவு மூலம், வெளிநாடு செல்ல பாஸ்போட்டும் தயாராக வாங்கியிருந்தார். ஆனால், அம்மாநாட்டில் தி.மு.க., வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாலும், ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதாலும் வைகோ மாநாட்டிற்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டன் மாநாட்டில், தி.மு.க., வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், லண்டன் செல்லவில்லை என்றும், அவருக்கு பதிலாக பிரதிநிதிகள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர், தொல்.திருமாவளவன் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளார். அவர், எப்போது பயணிக்கிறார் என்பது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:இலங்கை தமிழர்கள் நலனுக்காக, நிறைவேற்றப்பட்ட, டெசோ மாநாட்டின் தீர்மானங்கள், நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் ஒப்படைக்கப்படுகிறது.மனித உரிமை மீறல் குறித்து, 150 பக்கங்கள் கொண்ட மனுக்கள் மற்றும் டெசோ மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய ஆடியோ சிடிக்கள், இலங்கை தமிழர்களின் துயரச்சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரின்‌போது, பதவியிலிருந்த தி.மு.க., அவர்களை காப்பாற்ற எதுவும் செயியவில்லை என்ற குற்றச்சாட்டு உலகத் தமிழர் மத்தியில் தொடர்கிறது. ராஜபக்ஷேவைவை விட, தி.மு.க.,வை குற்றவாளியாக முன் நிறுத்துவதில், பல்வேறு தமிழ் அமைப்புகளும் தீவிரமாயி இருந்து வருகின்றன.இந்நிலையில், லண்டன் தமிழர்கள் மத்தியில்,பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் மீதுள்ள கோபத்தைபோக்க, தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது. தி.மு.க.விற்கு கிடைத்த இந்த வாய்ப்பு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் மத்தியில், செல்வாக்கு பெற்றிருந்த, ம.தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக