10 அக்டோபர் 2012

யுத்தக் குற்றச்செயல்களை தடுக்க இந்தியாவும் ஐ.நாவும் முயலவில்லை!

யுத்தக் குற்றச் செயல்களை தடுக்க இந்தியாவும், ஐநாவும் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை –இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களை தடுப்பதற்கு இந்தியாவும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் காத்திரமான பங்களிப்பை வழங்கத் தவறியதாக பிரபல பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டு இயங்குகின்றதா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட தருணத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலயத்தின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்தது எனக் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் சிறுபான்மை தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நியாயவம் வழங்கவும் தற்போது இந்தியா, தற்போது இலங்கை அரசாங்கத்தின் மீது கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கும் என எதிர்பார்ப்பதாக பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டில் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதனை தெற்கைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மறுதலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சொந்த மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கியமையை பல தமிழர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வி நிச்சயம் என்ற நிலையிலும் புலிகள் பலவந்தமாக சிறுவர் போராளிகளை படையில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தப்பித்த பலர் இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பதனை உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலமாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தை கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரத் தரவுகளில் முரண்பாடுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1995ம் ஆண்டில் போஸ்னியாவில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் தற்போது சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் உயிரிழந்தவர்களை விடவும் அதிகளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகம் விரிவானதும் அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஓர் கட்டமைப்பை உருவாக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஏனைய உலக நாடுகளில் தமிழ்ப் புலம்பெயர் மக்கள் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும் வெளித் தரப்பினரிடமிருந்து போதியளவு ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்கச்சார்பற்றதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் இதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு மீண்டும் இலங்கையில் தமிழ் கிளர்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமது நூலிற்காக செவ்வி கண்ட எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் மீண்டும் போராட விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் வரையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் ஈடுபட்ட சகல தரப்பினரும் பிழைகளை ஒப்புக்கொண்டு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமென பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக