23 அக்டோபர் 2012

சிறீலங்காவின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் மன்னிப்புச்சபை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் நவம்பர் 1-ம் நாள் சிறீலங்கா நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிறீலங்கா தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  விரிவானதோர் ஆய்வு அறிக்கை தயாரித்திருக்கிறது.அதை ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
சிறீலங்கா அரசின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் பற்றிய விரிவான ஆய்வு 2008ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையில் போர் நடைபெற்றுவந்துள்ளது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு வாக்குறுதிகளை சிறீலங்கா அளித்தது .
போர் முடிந்து மூன்றரை ஆண்டுகளாகி விட்ட நிலையில் சிறீலங்கா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கடும் விமர்சனங்களையும் சர்வதேச மன்னிப்புச்சபை  முன்வைக்கிறது.
சிறீலங்காவில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டாலும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் நீடிக்கவே செய்கின்றன.
எந்தவித காரணத்தையும் கூறாமல் பொதுப் பாதுகாப்பு என்ற பெயரில் கைது செய்யப்படுவது சிறீலங்காவில் தொடர்கிறது. ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களாக சந்தேகிக்கப்படுவோர் அவர்களது குடும்பத்தினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசை விமர்சிப்பவர்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் இவ்வாறு காரணம் எதுவும் கூறாமல் கைது செய்யப்படுகின்றனர்.
காவல்துறை தவிர அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் படையினரும் மனித உரிமைகளை மீறி கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எந்தவித வழக்கு விசாரணையும் இன்றி பல நாட்கள் சிறையில் அடைக்கப்படும் இவர்களில் சிலர் கொல்லப்படுவதும் உண்டு.
காணாமல் போனோர் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்கு சிறீலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தபோதும் அரசை விமர்சிப்போர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல கைதிகளை மனிதத் தன்மையற்ற முறையில் கொடுமைப்படுத்துவது மிக மோசமாக நடத்துவது ஆகியவை தொடரவே செய்கின்றன. ஆயுதம் தாங்கிய குழுக்கள் கொலைகளில் ஈடுபடுவது போலீஸ் நிலைய மரணங்களும் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை தண்டிக்கப்படுவதும் இல்லை.
சிறீலங்கா எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை  பரிந்துரைத்திருக்கிறது.

� முக்கியமாக தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் நெருக்கடி நிலை காலத்திலும் தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் கைதானோரை விடுதலை செய்ய வேண்டும்.

� தேசிய மனித உரிமை ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும்.

� சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும்.

� மனித உரிமை மீறல்கள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தில் அளிக்கப்பட்ட எழுத்து பூர்வமான விசாரணைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

� எல்எல்ஆர்சி விசாரணையின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கக்கூடாது.

� ஆட்கள் காணாமல் போவது தொடரும் ஆட்கடத்தல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி காரணமானோரைத் தண்டிக்க வேண்டும்.

� மரண தண்டனையை உடனடியாக ஒழித்து அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்.

� சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நடந்த அனைத்துக் கொலைகளையும் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

சிறீலங்காவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரசாரத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை  ஈடுபட்டுள்ளது.
இதன்படி 09248074010 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தப் பிரசாரத்தில் பங்கேற்போரது ஆதரவு இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச்சபை  கருதுகிறது.மிஸ்டு கால் கொடுத்தோரது எண்ணிக்கை இந்திய அரசிடமும் ஐ.நா.விடமும் அளிக்கப்படும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை  தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் நவம்பர் 1ம் நாள் சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இதற்கென இந்திய அரசுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுப்பதற்கும் இது உதவும் என சர்வதேச மன்னிப்புச்சபை  தனது களஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக