30 அக்டோபர் 2012

ராஜிவ் கொலையில் பதுக்கப்பட்ட “வீடியோ கேசட்”.

 Rajiv Gandhi Assassination Video Suppressed ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐபி தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டுவிட்டு என்பதுதான்!
ராஜிவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு ஐ.பி அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்குவங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் ஒரு கடிதம் எழுதினார். அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது. அதில் "அந்த பெண்மணியை" அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் கடைசிவரை ஐ.பி வசம் இருந்த அந்த கேசட் சிபிஐயிடமும் சரி.. வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு.
அந்த கேசட்...
ராஜிவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள்தான் பிரதான ஆதாரமாக இருந்தது. இந்த நிலையில் சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணிநேரம் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜிவை கொலை செய்திருக்கின்றனர். அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார் யாருடன் பேசினர்..? எப்படி ராஜிவுக்கு மாலையிடும் இடத்துக்கு மெதுமெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐபி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம்.
மரகதம் சந்திரசேகரைக் காப்பாற்ற?
தமது முந்தைய புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சனை வரும் என்று கருதி முழுப்பூசணியை மறைத்துவிட்டது ஐ.பி. என்று சாடியுள்ளார். அத்துடன் "இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்" என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சிவராசன் ஊடுறுவ மரகம்தான் காரணம்
காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது பலதரப்பிலும் வெளியான தகவல். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போதைய புத்தகத்திலும் கேசட் பற்றிய எம்.கே. நாராயணின் 1991-ம் ஆண்டு மே 22-ந் தேதி கடிதம் பற்றியும் இந்த கேசட்டுக்கு என்னாச்சு என்றும் மீண்டும் ரகோத்தமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அந்த கேசட் பற்றிய உண்மை தெரிஞ்சாகனும்....என்கிற ரகோத்தமன் குரலுக்கு எப்ப விடை கிடைக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக